மநாதபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.குறிப்பாக, கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட பூண்டு தற்போது ரூ.400 ஆகவும், ரூ.240-க்கு விற்பனை செய்யப்பட்ட வரமிளகாய் ரூ.340 ஆகவும் உயர்ந்துள்ளது.
அதேபோல், அரிசி விலை ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு பருப்பு வகைகளின் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.கடந்த மூன்று மாதங்களில் சில பொருட்களின் விலை சுமார் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து வியாபாரமும் மந்தமடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
Buy Now ! Pay Daily !
இதனால், அன்றாடக் கூலி வேலைக்குச் செல்லும் சித்தாள் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்து பிழைப்பு நடத்துவோர் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வருமானம் உயராத நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை மட்டும் தொடர்ந்து அதிகரிப்பதால், கூடுதல் விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஏற்கெனவே குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் தவித்து வரும் மக்களுக்கு இந்த விலையேற்றம் கூடுதல் சுமையாக மாறியுள்ளது. எனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், சந்தை விலைகளைக் கண்காணிக்கவும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.






