சம்பவத்தின் பின்னணி என்ன?
கடந்த இரண்டு ஆண்டுகளாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மணீஷ் என்ற ஊழியர், சபரிமலை யாத்திரைக்கான 41 நாள் மண்டல விரதத்தைக் கடைப்பிடித்து வந்துள்ளார். வழக்கமாக ஐயப்ப விரதத்தின் போது பக்தர்கள் கருப்பு அல்லது நீல நிற ஆடைகளைஅணிந்து, காலணிகள் இன்றி விரதம் மேற்கொள்வது வழக்கம். நவம்பர் 19 அன்று மணீஷ் பாரம்பரிய விரத உடையில் ஆதிபட்லா அலுவலகத்திற்குச் சென்றபோது, நிறுவனத்தின் ஆடைக் கட்டுப்பாட்டைக் காரணம் காட்டி நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மணீஷ் முன்வைத்த முக்கியக் குற்றச்சாட்டுகள்: - தான் ஐயப்ப விரதம் இருக்கப் போவதாக இரண்டு மாதங்களுக்கு முன்பே நிர்வாகத்திடம் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். - நிறுவனத்தில் உள்ள மற்ற ஊழியர்கள் பலரும் நிர்ணயிக்கப்பட்ட ஆடைக் கட்டுப்பாடு இல்லாமல் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படும் நிலையில், தன்னை மட்டும் குறிவைத்துத் தடுப்பதாகவும், சில திட்டங்களில் ஆடைக் கட்டுப்பாடு இருக்கும்போது மற்றவற்றில் ஏன் இல்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Buy Now ! Pay Daily !
போராட்டமும் பதற்றமும்
ஊழியருக்கு நுழைவு மறுக்கப்பட்ட தகவல் பரவியதும், ஐயப்ப பக்தர்களும் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆதிபட்லா டிசிஎஸ் வளாகம் முன்பு கூடினர். தீட்சை அணிந்த ஊழியரைப் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். அமைப்பினர் அலுவலகத்திற்குள் நுழைய முயன்றபோது காவல்துறையினர் தடுக்க முயன்றதாகவும், அதையும் மீறிச் சிலர் உள்ளே சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
காவல்துறையின் விளக்கம்
- பாரம்பரிய உடை தொடர்பாக ஏற்பட்ட தவறான புரிதலே இச்சர்ச்சைக்குக் காரணம் எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதில் மதரீதியான (இந்து–முஸ்லிம்) நோக்கம் எதுவும் இல்லை என்பதைக் காவல்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
- இதுவரை எந்தத் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் வரவில்லை என்றும், ஊழியரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து வருவதாகவும், தற்போது நிலைமை முழுமையாகக் கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.






