இரவு முழுவதும் மணல் வேட்டை... கண்டுகொள்ளாத அதிகாரிகள்! வைகை ஆற்றைக் காப்பாற்ற மாவட்ட நிர்வாகம் முன்வருமா?
சிவகங்கை மாவட்டத்தில் வைகை ஆற்றின் மணல் வளம் இரவு நேரங்களில் தொடர்ந்து கொள்ளையடிக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, திருப்புவனம், லாடனேந்தல், மற்றும் மாரநாடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு, கனரக லாரிகளில் கடத்தப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
Buy Now ! Pay Daily !
மணலூர் முதல் பார்த்திபனூர் மதகு அணை வரை சுமார் 55 கிலோமீட்டர் தூரத்திற்கு சிவகங்கை மாவட்டத்தில் பாயும் வைகை ஆற்றிலும், அதன் கரையோர நிலங்களிலும் அதிக அளவில் மணல் வளம் காணப்படுகிறது. இப்பகுதிகளில் மணல் அள்ளுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி இரவு நேரங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான கனிம வளங்கள் தொடர்ந்து அள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது. ஒரு லோடு மணல் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் விற்பனை செய்யப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து நடைபெறும் மணல் கடத்தலால் ஆற்றிலும், கரையோரப் பகுதிகளிலும் மிகப்பெரிய பள்ளங்கள் உருவாகியுள்ளன. மணல் அள்ளுவதற்காக ஆற்றின் கரைகளும் சேதப்படுத்தப்படுவதால், மழைக்காலங்களில் வைகையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது தண்ணீர் விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, இரவு நேரங்களில் கனரக லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு மணல் அள்ளப்படுவதாகப் புகார்கள் அளித்தும், வருவாய்த்துறை, கனிமவளத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். புகார்களின் அடிப்படையில் இடத்தின் உரிமையாளர்கள் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்படுவதாகவும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதில்லை என்றும் வேதனை தெரிவிக்கின்றனர்.
மானாமதுரை, திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏற்கனவே வழிப்பறி, கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் குறித்த அச்சம் நிலவி வரும் நிலையில், தற்போது இயற்கை வளக் கொள்ளையும் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். மணலூர் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டம் சூடியூர் வரையிலான வைகை ஆற்றுப் பகுதிகளிலும் மணல் கடத்தல் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
சட்டவிரோத மணல் கடத்தலைத் தடுக்க கனிமவளத்துறை அமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவை களத்தில் ஏன் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இரவு நேரக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டிய காவல்துறையின் உளவுப்பிரிவு மற்றும் தனிப்பிரிவினரும் முறையாகக் கண்காணிக்கிறார்களா என்ற சந்தேகத்தையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.
எனவே, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடியாகத் தலையிட்டு, திருப்புவனம், லாடனேந்தல், மாரநாடு உள்ளிட்ட வைகை ஆற்றுப் பகுதிகளில் சிறப்புக் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும். சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுவோர், அதற்குப் பயன்படுத்தப்படும் கனரக லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பல தலைமுறைகளின் வாழ்வாதாரமாக விளங்கும் வைகை ஆற்றின் இயற்கை வளம் பாதுகாக்கப்படுமா? ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நடைபெறுவதாகக் கூறப்படும் மணல் கொள்ளைக்கு மாவட்ட நிர்வாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது






