கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை கைது செய்ய வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
Buy Now ! Pay Daily !
இதன் தொடர்ச்சியாக இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின், ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரை நேரில் சந்தித்து புகார் அளித்தார். இந்தச் சந்திப்பின்போது திமுக எம்.பி.க்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
முதல்வர், தலைமைச் செயலாளர் மீது உதயநிதி குற்றச்சாட்டு
ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவர் ரவிசங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை ஆளுநர் நேரில் வரவழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், புதிய ஆட்சி அமைந்த ஆறு மாதங்களில் நடைபெற்ற குற்றச் சம்பவங்களில் 80 சதவீதத்திற்கும் மேலானவற்றில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளே குற்றவாளிகளாக இருப்பதாகக் குற்றம்சாட்டினார்.
முதல்வர் தூக்கத்தில் இருந்து எழுந்து, உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து குற்றவாளிகளைக் கைது செய்வார் என மக்கள் எதிர்பார்த்ததாகவும், ஆனால் டிஜிபி அலுவலகத்தில் தான் அளித்த பேட்டியை நீக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் முதல்வர் இன்னும் திருந்தவில்லை என்பது தெரிகிறது என்றும் விமர்சித்தார்.
வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிக்கை
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டிய உதயநிதி ஸ்டாலின், இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், இந்த விவகாரத்தை 116 நாட்களாக தலைமைச் செயலாளர் மூடி மறைத்துள்ளதாகக் குற்றம்சாட்டிய அவர், இந்தப் பிரச்சினையை முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு சென்றாரா இல்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் எம்எல்ஏவைப் பாதுகாப்பதற்காக தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியரிடம் பேரம் பேசியுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் முதல்வர் மற்றும் தலைமைச் செயலாளரையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அதேபோல், இந்தச் சம்பவமே நடைபெறவில்லை எனக் கூறிய மூன்று அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.





