தங்கம் விலை உயர்ந்தால் நகை வாங்குபவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அதே நேரத்தில், தங்கம் விலை குறைந்தால் நகைக்கடன் பெற்றவர்களுக்கு சில நேரங்களில் சிக்கல் ஏற்படலாம் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். தற்போது தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள சரிவைத் தொடர்ந்து, நகைக்கடன் பெற்ற சில வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் நோட்டீஸ் அனுப்பி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, தங்கம் விலை அதிகமாக இருந்தபோது தங்களிடம் இருந்த நகைகளை அடமானம் வைத்து அதிக தொகைக்குக் கடன் பெற்றவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. தங்கத்தின் விலை குறையும்போது, அடமானம் வைக்கப்பட்ட நகையின் தற்போதைய மதிப்பும் குறைகிறது. இதனால் ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன் தொகைக்கும், நகையின் தற்போதைய மதிப்புக்கும் இடையே வித்தியாசம் ஏற்படுகிறது.
Buy Now ! Pay Daily !
இதன் காரணமாகவே சில வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகையைச் செலுத்துமாறு அறிவுறுத்தி வருகின்றன. அப்படி வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்? நகையை உடனடியாக ஏலம் விடுவார்களா? கூடுதல் பணம் செலுத்த முடியாவிட்டால் என்ன நடக்கும்? இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.
1. தங்கம் விலை குறைந்தால் நகைக்கடனில் என்ன பிரச்சினை?
பொதுவாக ஒருவர் வங்கியில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறும்போது, அந்த நகையின் எடை மற்றும் அன்றைய தங்கத்தின் சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கடன் தொகை நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக, ஒருவரிடம் 10 சவரன் தங்க நகைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். அந்த நகைகளின் மதிப்பு ஒரு குறிப்பிட்ட நாளில் ரூ.8 லட்சமாக இருந்தால், வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப அதில் ஒரு குறிப்பிட்ட சதவீதத் தொகையை மட்டுமே கடனாக வழங்க முடியும்.
ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு தங்கம் விலை குறைந்து அதே நகைகளின் மதிப்பு ரூ.6 லட்சமாக மாறிவிட்டால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் அனைவருக்கும் இருக்கும். முன்பு ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகைகளை அடமானம் வைத்து கடன் வழங்கிய வங்கிக்கு, தற்போது அந்த நகைகளின் மதிப்பு குறைந்துவிட்டது. இதனால் வங்கி வழங்கிய கடனுக்கும், நகையின் தற்போதைய மதிப்புக்கும் இடையிலான பாதுகாப்பு அளவு குறைகிறது.
இதுபோன்ற சூழலில் வங்கிகள் கடன் பெற்றவர்களிடம் நிலுவைத் தொகையில் ஒரு பகுதியைச் செலுத்துமாறு கேட்கலாம். இதைத்தான் நிதித்துறையில் 'மார்ஜின் கால்' (Margin Call) என்று அழைக்கிறார்கள்.
2. வங்கிகள் ஏன் நோட்டீஸ் அனுப்புகின்றன?
இதற்குப் பின்னால் இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கடன் மதிப்பு விகிதம் (Loan-to-Value Ratio - LTV) தொடர்பான விதிமுறைகள் உள்ளன.
LTV என்பது ஒருவர் அடமானம் வைக்கும் தங்கத்தின் மதிப்புடன் ஒப்பிடும்போது, வங்கி அவருக்கு எவ்வளவு கடன் வழங்கியுள்ளது என்பதைக் குறிக்கும் விகிதமாகும். எளிமையாகச் சொன்னால், ரூ.1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடமானம் வைத்தால், அதற்கு எவ்வளவு கடன் வழங்கலாம் என்பதை நிர்ணயிக்கும் அளவுதான் LTV.
தங்கத்தின் விலை குறையும்போது, அடமான நகையின் மதிப்பும் குறைகிறது. இதனால் ஏற்கெனவே வழங்கப்பட்ட கடன் தொகை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட அதிகமாகிவிடும் சூழல் ஏற்படலாம்.
அப்போது வங்கிகள் அந்த வித்தியாசத்தைச் சரிசெய்ய வாடிக்கையாளர்களிடம் கூடுதல் தொகையைச் செலுத்துமாறு கேட்கின்றன. இது வாடிக்கையாளர்களைத் தண்டிப்பதற்காக அல்ல; கடனுக்கான பாதுகாப்பு மதிப்பை விதிமுறைகளுக்கு உட்பட்டு பராமரிப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும்.
3. RBI விதிகளின்படி எவ்வளவு கடன் பெறலாம்?
ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி, தங்க நகைகளின் மதிப்பைப் பொறுத்து வங்கிகள் வழங்கக்கூடிய கடன் தொகைக்கு வரம்புகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
உதாரணமாக, ரூ.2 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை அடமானம் வைத்தால், அந்தக் கடன் வகைக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பின்படி அதிகபட்சம் ரூ.1.70 லட்சம் வரை கடன் பெற முடியும். அதேபோல், ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன் பெறுபவர்களுக்கு நகையின் மதிப்பில் அதிகபட்சம் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும்.
இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், தங்கத்தின் விலை குறையும்போது நகையின் மதிப்பும் குறைவதால், ஏற்கெனவே பெற்ற கடன் தொகை அனுமதிக்கப்பட்ட LTV வரம்பைத் தாண்டும் வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட நேரத்தில்தான் வங்கிகள் வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்கின்றன.
4. வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?
நகைக்கடன் பெற்றவர்களுக்கு வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்துவிட்டால் உடனடியாகப் பதற்றமடையத் தேவையில்லை. முதலில் நோட்டீஸில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை முழுமையாகப் படிக்க வேண்டும். எவ்வளவு தொகை செலுத்த வேண்டும், எத்தனை நாட்களுக்குள் செலுத்த வேண்டும் போன்ற விவரங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதன்பிறகு கீழ்க்கண்ட வழிகளில் ஏதாவது ஒன்றைப் பின்பற்றலாம்.
1. நிலுவையில் உள்ள வட்டியைச் செலுத்தலாம்
சில நேரங்களில் கடனுக்கான வட்டி தொடர்ந்து சேர்வதால் மொத்த நிலுவைத் தொகை அதிகரிக்கலாம். இதனால் LTV வரம்பு மீறப்படுவதற்கான வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, வங்கியிடம் பேசி முதலில் செலுத்த வேண்டிய நிலுவை வட்டியைத் தெரிந்துகொண்டு அதைச் செலுத்தலாம்.
2. கடன் தொகையில் ஒரு பகுதியைச் செலுத்தலாம்
வங்கியிடம் இருந்து கூடுதல் தொகை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டால், அந்த வித்தியாசத் தொகையை முழுமையாகவோ அல்லது வங்கி அனுமதிக்கும் வகையில் ஒரு பகுதியையோ செலுத்தலாம். இதன் மூலம் நிலுவைக் கடன் தொகையைக் குறைத்து நகைக்கடனைத் தொடர்ந்து வைத்திருக்க முடியும்.
3. கூடுதல் தங்க நகைகளை அடமானம் வைக்கலாம்
உடனடியாகப் பணம் செலுத்த முடியாதவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். ஏற்கெனவே அடமானம் வைத்துள்ள நகைகளுடன் கூடுதல் நகைகளை அடமானமாக வழங்குவதன் மூலம் கடனுக்கான பாதுகாப்பு மதிப்பை அதிகரிக்க முடியுமா என்று வங்கியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதற்கு வங்கியின் ஒப்புதல் மற்றும் விதிமுறைகள் அவசியம்.
4. கடனை முழுமையாகச் செலுத்தி நகைகளை மீட்கலாம்
கையில் போதுமான பணம் இருந்தால் கடன் மற்றும் நிலுவை வட்டியைச் செலுத்தி நகைகளை மீட்டுக்கொள்ளலாம். வேறு இடத்தில் கடன் வாங்கி இதைச் செய்ய நினைத்தால், அதற்கான வட்டி மற்றும் கூடுதல் கட்டணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே முடிவெடுக்க வேண்டும்.
5. வங்கி உடனடியாக நகைகளை ஏலம் விட முடியுமா?
இதுதான் நகைக்கடன் பெற்றவர்களிடம் இருக்கும் மிகப்பெரிய அச்சம். வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தவுடன் அடுத்த நாளே நகைகளை ஏலம் விட்டுவிடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். கடன் ஒப்பந்தம், பொருந்தக்கூடிய ரிசர்வ் வங்கி விதிமுறைகள் மற்றும் ஏல நடைமுறைகளை வங்கிகள் பின்பற்ற வேண்டும்.
கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தாதபோது, வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்பு வழங்கி, கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்பை வழங்கிய பிறகே ஏல நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், ஏலம் தொடர்பான அறிவிப்புகள் மற்றும் வெளிப்படையான நடைமுறைகளையும் வங்கிகள் பின்பற்ற வேண்டும். வாடிக்கையாளருக்கு உரிய அறிவிப்பு வழங்காமல் தன்னிச்சையாக நகைகளை ஏலம் விடுவது முறையான நடைமுறை அல்ல. எனவே, நோட்டீஸ் வந்தவுடன் அதை அலட்சியப்படுத்தாமல் வங்கியை அணுகுவது மிகவும் முக்கியம்.
நகைக்கடன் பெற்றவர்கள் கவனிக்க வேண்டியவை
வங்கியிலிருந்து வரும் குறுஞ்செய்தி, தொலைபேசி அழைப்பு மற்றும் நோட்டீஸ்களை அலட்சியப்படுத்த வேண்டாம். கடன் கணக்கில் எவ்வளவு அசல் தொகை மற்றும் வட்டி நிலுவையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். LTV வரம்பு மீறப்பட்டுள்ளதா, எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் என்பதை வங்கியிடம் எழுத்துப்பூர்வமாகக் கேட்டுப் பெறுங்கள். கூடுதல் அவகாசம் கிடைக்குமா என்பதையும் வங்கியிடம் விசாரியுங்கள். வங்கியின் அதிகாரப்பூர்வ கணக்கு அல்லது கிளை மூலமாக மட்டுமே பணம் செலுத்துங்கள். ஏல நோட்டீஸ் வந்திருந்தால் உடனடியாக வங்கியை அணுகி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்.
நகைக்கடன் வாங்கியவர்கள் இனி என்ன செய்ய வேண்டும்?
தங்கம் விலை உயரும்போது அதிகத் தொகை கடனாகப் பெறலாம் என்ற எண்ணத்தில் பலரும் தங்களது நகைகளை அடமானம் வைக்கின்றனர். ஆனால் தங்கத்தின் விலை எப்போதும் ஒரே நிலையில் இருக்காது. விலை உயர்வதும், சரிவதும் சந்தையின் இயல்பான மாற்றங்களாகும்.
எனவே, தங்கத்தின் விலை அதிகமாக இருக்கும்போது கிடைக்கும் அதிகபட்சக் கடன் தொகையை மட்டும் கருத்தில் கொண்டு கடன் பெறாமல், திருப்பிச் செலுத்தும் திறனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஏற்கெனவே நகைக்கடன் பெற்றவர்கள் தங்களது கடன் கணக்கை அவ்வப்போது சரிபார்ப்பது நல்லது. வங்கியிலிருந்து நோட்டீஸ் வந்தால் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்கம் விலை சரிவால் நகையின் மதிப்பு குறையலாம்; ஆனால் அலட்சியத்தால் உங்கள் நகையை இழக்கும் நிலை ஏற்படக்கூடாது. எனவே, நகைக்கடன் பெற்றவர்கள் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள LTV வரம்புகள் மற்றும் ஏல நடைமுறைகள் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டவை. இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே.






