கடந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், வர்த்தகப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி உலக நாடுகள் மீது அதிகப்படியான வரிகளை விதித்தார். ஆனால், அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இதற்குத் தடை விதித்தது.
இதையடுத்து, மாற்று வழியாக 1974-ஆம் ஆண்டின் வர்த்தகச் சட்டப் பிரிவு 301-ன் கீழ் புதிய வரிகளை விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்தது.
Buy Now ! Pay Daily !
அதன் ஒரு பகுதியாக, கட்டாய உழைப்பு தடுப்புச் சட்டங்கள் மற்றும் வெளிநாடுகளின் தொழில்துறை மானியங்கள் குறித்து அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் கடந்த மார்ச் மாதம் இரண்டு தனித்தனி விசாரணைகளைத் தொடங்கியது.
வெளிநாட்டு விநியோகச் சங்கிலிகளில் நிலவும் கட்டாய உழைப்பு குறித்த முதற்கட்ட விசாரணை கடந்த ஜூலை மாதம் நிறைவடைந்தது. அதன் அடிப்படையில் இந்தியா உள்ளிட்ட 60 நாடுகளின் பொருட்களுக்கு 10 முதல் 12 சதவீதம் வரை வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
தற்போது, சர்வதேச நாடுகளின் தொழில்துறை மானியங்கள் குறித்த இரண்டாவது விசாரணையும் முடிவடைந்துள்ள நிலையில், அதன் முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.
இதன் தொடர்ச்சியாகவே, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 14 முக்கிய வர்த்தக நாடுகளின் மீது 10 முதல் 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் முடிவை அமெரிக்க நிர்வாகம் எடுத்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு நாடுகள் மீதான வரி விகிதங்கள்
அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறைத் திறனை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளது. எனினும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் பட்சத்தில், இந்த வரி விகிதம் குறைந்தபட்சம் 17 சதவீதமாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மேலும் சீனப் பொருட்களுக்கு அடிப்படை வரியான 20 சதவீதத்துடன், எஃகு, மின்சார வாகனங்கள் மற்றும் சூரிய சக்தி உபகரணங்களைக் குறைந்த விலையில் சந்தையில் குவிப்பதைத் தடுக்கும் விதமாக 20 சதவீத அபராத வரியும் சேர்த்து, மொத்தம் 40 சதவீத வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
ஏனைய நாடுகளான வங்கதேசம், ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பொருட்களுக்கு 20 சதவீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளது.






