← முகப்பு

ஈரானில் தொடரும் ஆணவக் கொலைகள்!

ஈரானில் 19 வயது இளம்பெண் ஒருவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த அவரது பெற்றோரே அவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் தொடரும் ஆணவக் கொலைகள்!

மேற்கு ஈரானின் சனந்தாஜ் நகரைச் சேர்ந்தவர் 19 வயதான இளம்பெண் ஹெலியா ஃபட்டாஹி . இவர் ஒரு இளைஞருடனான காதல் உறவின் மூலம் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரித்ததாக கூறப்படுகிறது.

ஹெலியா தான் இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக அவரது பெற்றோர்களான வோரியா ஃபட்டாஹி மற்றும் லைலா வெய்சி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

திருமணத்திற்கு முந்தைய உறவுகள் மற்றும் கர்ப்பம் என்பது ஈரானில் கடுமையான சமூக மற்றும் சட்ட ரீதியான தடைகளுக்கு உட்பட்டவை என்பதால், மகள் கர்ப்பமானதை அறிந்த பெற்றோர் முதலில் நீதிமன்றத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளனர்.

பின்னர் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள், ஹெலியாவை வலுக்கட்டாயமாக வலிப்பு நோய் எதிர்ப்பு மாத்திரைகளை விழுங்க வைத்துள்ளனர்.

அதன்பிறகு, அவரைக் கடுமையாகத் தாக்கியதுடன், தலையணையால் முகத்தை அழுத்தி மூச்சை திணறடித்துக் கொலை செய்துள்ளனர்.

குற்றத்தை ஒப்புக்கொண்ட தம்பதியர்

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இந்தக் கொலை நடந்த அன்றே, சனந்தாஜ் நகர காவல்துறையினர் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இது குறித்துக் குர்திஸ்தான் மாகாண குற்றவியல் காவல்துறைத் தலைவர் கூறுகையில், விசாரணையின் போது பெற்றோர் இருவரும் தங்கள் மகளைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டதாகவும், "குடும்பத் தகராறு" காரணமாகவே இந்தக் கொலையைச் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இளைஞர் குறித்த தகவல்களை காவல்துறை வெளியிடவில்லை.

ஈரானில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள்

இந்தக் கொடூரச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஈரானில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்முறைகள் மற்றும் 'ஆணவக் கொலைகள்' குறித்து மனித உரிமை அமைப்புகள் மீண்டும் கவலை எழுப்பியுள்ளன.

இது பாலின அடிப்படையிலான வன்முறை என்றும், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவரின் உறவினர்களாக இருந்தாலும் அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

நவம்பர் மாதத்தில் மட்டும் இரண்டு கொலைகள்

இதேபோல் கடந்த நவம்பர் 19ம் தேதி வடக்கு ஈரானின் கிலான் மாகாணத்தில், 23 வயதான சதஃப் ஹக்பின் என்ற இளம்பெண் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். திருமணத்திற்கு மறுத்ததால் அவரது முன்னாள் காதலன் இந்தக் கொலையைச் செய்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்ததாக கடந்த நவம்பர் 15ம் தேதி மேற்கு ஈரானின் கெர்மன்ஷா நகரில், சோகண்ட் சய்யாதி என்ற மாணவி வீட்டின் மாடியிலிருந்து விழுந்து இறந்தார்.

இதுகுறித்து விசாரித்த போது மாணவியின் காதல் விவகாரம் குறித்து பள்ளி முதல்வர் அவரது தந்தையிடம் கூறியதாகவும், இதனால் அவரது தந்தையே அவரை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாக போலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஈரானில் பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடந்துவரும் ஆணவக் கொலைகளுக்கு கடுமையான சட்ட வரைவுகளை கொண்டு வரவேண்டும் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !