← முகப்பு

ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் படுகாயம்!

சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள நிதி மையத்தின் கோபுரத்தை இலக்காக வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ட்ரோன் தாக்குதலில், இந்தியர்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹவுதி அமைப்பினர் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் படுகாயம்!

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கும், ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே 2015-ம் ஆண்டு முதல் மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த மோதல் வெறும் உள்நாட்டுப் போராக மட்டுமல்லாமல், சவுதி அரேபியா மற்றும் ஈரான் ஆகிய இரு பிராந்திய வல்லரசுகளுக்கு இடையிலான மறைமுகப் போராக மாறியது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

சவுதி அரேபியா ஏமன் அரசுப் படைகளுக்கு ஆதரவளிக்க, ஈரான் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு நவீன ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி போரிட்டு வருகின்றனர்.இந்நிலையில் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

ரியாத் தாக்குதலும், காயமடைந்தோர் விவரமும்

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள நிதி மையத்தின் கோபுரம் ஒன்றின் மீது செவ்வாய்க்கிழமை ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. பொதுமக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இச்செயல் ஒரு கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் என சவுதி கூட்டணிப் படைகளின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மாலிக்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த 2 பேர், இந்தியர்கள் 2 பேர், நேபாள நாட்டினர் 3 பேர் மற்றும் எகிப்தியர்கள் 4 பேர் என மொத்தம் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தியத் தூதரகம் மற்றும் மத்திய அரசு கண்டனம்

ரியாத் தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் காயமடைந்ததை சவுதியில் உள்ள இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் எனவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

மேலும், வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் உள்ளூர் விதிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "சவுதி அரேபியாவின் உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

சவுதியின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறும் இத்தகைய தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அப்பிராந்தியத்தில் விரைவில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்பும் என நம்புகிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரியாத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, செவ்வாய்க்கிழமை இரவு ஏமன் தலைநகர் சனாவில் உள்ள சர்வதேச விமான நிலையப் பகுதிகளைக் குறிவைத்து சவுதி கூட்டணிப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தின.

இதனால் அப்பகுதியில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், வீடுகளின் ஜன்னல்கள் அதிர்ந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சவுதி படைகள் 72 வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஹவுதி ராணுவச் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரியா குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், சவுதி மீதான தாக்குதலுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார் மற்றும் அரபு லீக் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன. மறுபுறம், பிராந்திய அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துதல், சர்வதேச கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி, ஹவுதி அமைப்பு மற்றும் அதன் நான்கு முக்கியத் தலைவர்கள் மீது பிரிட்டன் அரசு புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !