இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஸ்டேஷன் என்றழைக்கப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்தை, அமெரிக்காவின் நாசா, ரஷ்யா, ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடா ஆகிய 5 விண்வெளி அமைப்புகள் இணைந்து இயக்குகின்றன. இதில் நாசாவே முதன்மைப் பங்கு வகிக்கிறது.
2011-ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பிராங்க் வூல்ஃப் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தின்படி, நாசா தனது நிதியைப் பயன்படுத்தி சீனாவுடனோ அல்லது சீன அரசு நிறுவனங்களுடனோ எந்தவொரு விண்வெளித் திட்டத்திலும் நேரடியாக இணைந்து செயல்படத் தடை விதிக்கப்பட்டது.
Buy Now ! Pay Daily !
நாசாவுக்கு விதிக்கப்பட்ட இந்தத் தடையால், நாசாவின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் சீன விண்வெளி வீரர்கள் நுழைய முடியாத சூழல் உருவானது.
எனவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீனா பங்கேற்க அமெரிக்கா தடை விதித்ததைத் தொடர்ந்து, சீனா தனக்கெனப் பிரத்யேகமாக ‘தியாங்காங்’ விண்வெளி நிலையத்தை உருவாக்கியது.
இதில் பொதுவாக மூன்று வீரர்கள் ஆறு மாதங்கள் வரை தங்கி ஆய்வு செய்வார்கள்; குழு மாற்றத்தின் போது ஆறு வீரர்கள் வரை இருக்க முடியும்.
சீனா - பாகிஸ்தான் ஒப்பந்தம்
கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தான் விண்வெளி வீரர்களுக்குப் பயிற்சி அளித்து விண்ணுக்கு அனுப்புவது தொடர்பாக சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இருவரில் ஒருவரான ஜீஷன் அலி, சீன விண்வெளி வீரர்கள் மையத்தில் தீவிரப் பயிற்சி பெற்று இந்தப் பயணத்திற்குத் தேர்வானார்.

முன்னதாக 2023 அக்டோபரில் பாகிஸ்தான் தொழிலதிபர் நமிரா சலீம் அமெரிக்காவின் 'விர்ஜின் கேலக்டிக்' விண்கலத்தில் விண்வெளி சுற்றுலா சென்றபோதிலும், அவர் துணை சுற்றுப்பாதை வரை மட்டுமே சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘ஷென்சோ-24’ திட்டமும் விண்வெளிப் பயணமும்
வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்திலிருந்து, ‘லாங் மார்ச்-2 எஃப்’ ராக்கெட் மூலம் ‘ஷென்சோ-24’ விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது.
இந்த விண்கலத்தில் சீன விண்வெளி வீரர்களான டாங் ஹோங்போ (Tang Hongbo) மற்றும் வு யி (Wu Yi) ஆகியோருடன் பாகிஸ்தான் விமானப்படை விமானியும் விண்வெளி ஆய்வு நிபுணருமான முகமது ஜீஷன் அலி பயணிக்கிறார்.
விண்வெளி நிலையத்தில் ஆய்வுப் பணிகள்
பூமியிலிருந்து சுமார் 340 முதல் 450 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வரும் சீனாவின் ‘தியாங்காங்’ விண்வெளி நிலையத்தில், ஜீஷன் அலி சுமார் ஒரு வார காலம் தங்கியிருப்பார். அங்கு சீன விண்வெளி வீரர்களுடன் இணைந்து பல்வேறு முக்கிய அறிவியல் பரிசோதனைகளை அவர் மேற்கொள்ளவுள்ளார்.
ஒரு வார கால ஆய்வுப் பணிகள் நிறைவடைந்ததும், கடந்த மே மாதம் விண்வெளி நிலையத்துடன் இணைந்த ‘ஷென்சோ-23’ விண்கலம் வழியாக, தற்போதைய குழுவினரான லாய் கா-யிங் மற்றும் ஜாங் ஜியுயான் ஆகியோருடன் இணைந்து ஜீஷன் அலி பூமிக்குத் திரும்புவார் எனச் சீன விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜீஷன் அலியின் நெகிழ்ச்சி உரை
விண்வெளிப் பயணத்திற்கு முன்னதாக ஜியுகுவானில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முகமது ஜீஷன் அலி, "25 கோடி பாகிஸ்தான் மக்களின் நம்பிக்கையைச் சுமந்துகொண்டு நான் விண்வெளிக்குச் செல்கிறேன்.
இந்தப் பயணம் ஒரு தொடக்கம் மட்டுமே; நிலவு மற்றும் செவ்வாய்க் கோளுக்கான எதிர்காலக் கூட்டு விண்வெளிப் பயணங்களுக்கு இது வலுவான அடித்தளமாக அமையும்" எனத் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.






