நெல்லை மாநகரின் முக்கிய நீர்நிலைகளில் ஒன்றான நயினார்குளத்தைச் சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கடந்த நவம்பர் 22-ம் தேதி தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ். ராஜேஷ்குமார் படகு சவாரி சேவையைத் தொடங்கி வைத்தார்.
படகு சவாரி தொடங்கப்பட்ட நாள் முதலே காலை மற்றும் மாலை நேரங்களில் உள்ளூர் மக்கள், குடும்பத்தினர் மற்றும் சிறுவர்கள் எனப் பலரும் நயினார்குளத்திற்கு ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர்.
Buy Now ! Pay Daily !
முதற்கட்டமாக 3 மற்றும் 4 பேர் அமரும் வகையில் 4 மிதி படகுகள் மற்றும் 12 பேர் பயணிக்கும் 1 மோட்டார் படகு இயக்கப்படுகிறது.
தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும் இந்தப் படகு சவாரிக்கு, நபர் ஒருவருக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மற்ற படகுகளுக்கு 30 நிமிடங்களும், மோட்டார் படகிற்கு 20 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களிடையே கிடைத்துள்ள மிகுந்த வரவேற்பைத் தொடர்ந்து, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் கூடுதலாக 5 படகுகள் கொண்டுவரப்பட்டு இயக்கப்படும் எனச் சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநகருக்குள்ளேயே குறைந்த கட்டணத்தில் குடும்பத்துடன் பொழுதைக் கழிக்க ஒரு சிறந்த பொழுதுபோக்கு மையம் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதே சமயம், குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து நீரைத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சமூக ஆர்வலர்கள் முன்வைத்துள்ளனர்.





