நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, காக்காச்சி மற்றும் குதிரைவெட்டி ஆகிய இடங்களில் இடைவிடாது பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இதன் காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து, காட்டாற்று வெள்ளம் போல் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியின் தடுப்புக் கம்பிகளைத் தாண்டித் தண்ணீர் சீறிப்பாய்ந்து வருவதால், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
எனினும், அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடையாமல் இருக்க, பாதுகாப்பு வளையத்திற்கு வெளியே தொலைவில் நின்று அருவியின் இயற்கை அழகைப் பார்வையிடவும், புகைப்படம் எடுக்கவும் மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மழைப்பொழிவு குறைந்து அருவியில் நீர்வரத்து சீரான பிறகே, சுற்றுலாப் பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும், மழைக்காலம் என்பதால் அருவிப் பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






