← முகப்புமதுரை →

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததால் பதற்றம்..இந்து முன்னணியினர் கைது!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்ட தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படாததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.

கார்த்திகை தீபத் திருநாளான இன்று (நவ. 24), திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் ஒருமுறை அனுமதி வழங்கியிருந்தது. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோயிலில் வழக்கமாக ஏற்றப்படும் இடத்தில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அங்கு தீபமும் ஏற்றப்பட்டது. ஆனால், உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்ட மலை உச்சி தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பக்தர்கள், தீபத்தூணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனக் கோரி அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாதது குறித்து காவல்துறையினரிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் காவல்துறையினர் கைது செய்யத் தொடங்கினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிலரை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் திருப்பரங்குன்றம் மலை அடிவாரப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

தொடர்ந்து, அங்கு கூடியிருந்தவர்களிடம் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர், “நீங்கள் கூடியிருப்பது சட்டவிரோதமான கூட்டம். உடனடியாகக் கலைந்து செல்ல வேண்டும். இல்லையெனில் தடியடி நடத்தி கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்” என அறிவித்தனர்.

ஏற்கெனவே, தீப விவகாரத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் முழுவதும் பாரதிய நாகரிக் பாதுகாப்புச் சட்டம் (BNSS) பிரிவு 163-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மலைப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிலையில், தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டமும், அதைத் தொடர்ந்து நடந்த கைதுகளும் திருப்பரங்குன்றத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தீபம் ஏற்றப்படாதது ஏன்? - கோயில் நிர்வாகம் விளக்கம்: திருக்கோயிலில் பல தலைமுறைகளாகப் பின்பற்றப்படும் ஆகம விதிகள் மற்றும் பாரம்பரிய மரபுகளின்படி, மூலவரின் சிரசுக்கு நேர்மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில்தான் மகாதீபம் ஏற்றப்பட வேண்டும் என அறங்காவலர் குழு ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. வரலாற்றுத் தொடர்ச்சி மற்றும் கோயில் மரபுகளை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதன்படியே வழக்கமான இடத்தில் தீபம் ஏற்றப்பட்டதாகவும் கோயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !