← முகப்பு

“அண்ணாமலையாருக்கு அரோகரா..” - தி.மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்டது

“அண்ணாமலையாருக்கு அரோகரா..” - தி.மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத்தைக் காண பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

மகா தீபத்தை முன்னிட்டு அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அதிகாலை 4 மணியளவில் சுவாமி சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

ஆண்டுக்கு ஒருமுறை காட்சியளித்த அர்த்தநாரீஸ்வரர்

மாலையில் பஞ்சமூர்த்திகள் சுவாமி சன்னதி முன்பாக உள்ள தீப தரிசன மண்டபத்தில் எழுந்தருளினர். இதனைத் தொடர்ந்து, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரர், சுவாமி சன்னதியில் இருந்து ஆடியபடியே வெளியே வந்து சில நிமிடங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மலை உச்சியில் மகா தீபம் ஏற்றம்

அர்த்தநாரீஸ்வரர் காட்சியளித்ததைத் தொடர்ந்து, சரியாக மாலை 6 மணிக்கு சுவாமி சன்னதி முன்பாக அகண்ட தீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதையடுத்து, கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள் “அண்ணாமலையாருக்கு அரோகரா” என பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர். மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, கிரிவலப் பாதையில் இருந்த பக்தர்களும் மலை உச்சியை நோக்கி வணங்கி வழிபட்டனர்.

50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்

கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதற்கிடையே, மகா தீபம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து மலை மீது பக்தர்கள் ஏறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மகா தீபம் மற்றும் அதனைத் தொடர்ந்து வரும் நாட்களிலும் இந்தத் தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !