← முகப்புதஞ்சாவூர் →

பெண்ணை தவறாக வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பட்டுக்கோட்டையில் பரபரப்பு

பெண்ணை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண்ணை தவறாக வீடியோ எடுத்து பணம்  கேட்டு மிரட்டிய 2 பேர் கைது: பட்டுக்கோட்டையில் பரபரப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வாளைக் காட்டி மிரட்டி, அரைகுறை ஆடையில் இருந்தபோது வீடியோ எடுத்து ரூ.1 லட்சம் கேட்டு பணம் பறிக்க முயன்ற வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் தலைமறைவான 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

வீட்டுக்குள் புகுந்து மிரட்டல்

பட்டுக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெண் ஒருவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சுமார் 7 மணியளவில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கபிலன், சரவணன், சதீஷ், கோபிநாத் மற்றும் திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஜீவா ஆகிய 5 பேர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அப்போது கபிலன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். கதவை திறந்த பெண் அவரிடம் என்ன விவரம் என்று கேட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில் கபிலன் திடீரென வாளைக் காட்டி பெண்ணை மிரட்டி வீட்டுக்குள் நுழைந்ததாகவும், பின்னர் அவரை வலுக்கட்டாயமாக படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல்

இதற்கிடையே மற்ற 4 பேரும் வீட்டுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்போது அரைகுறை ஆடையில் இருந்த பெண்ணை வீடியோ எடுத்ததுடன், அந்த வீடியோவை வைத்து மிரட்டி ரூ.1 லட்சம் பணம் தர வேண்டும் என கேட்டுள்ளனர். மேலும், பெண்ணை தாக்கி அவர் அணிந்திருந்த கவரிங் சங்கிலியையும் பறித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. பணம் தராவிட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், நடந்த சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்ணின் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.

2 பேர் கைது; 3 பேருக்கு வலைவீச்சு

விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் திருவோணம் பகுதியைச் சேர்ந்த ஜீவா மற்றும் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கோபிநாத் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள பட்டுக்கோட்டையைச் சேர்ந்த கபிலன், சரவணன், சதீஷ் ஆகிய 3 பேரையும் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

பெண்ணை வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !