கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், அம்மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம், உயர்நீதிமன்றம் ஆகிய அமைப்புகள் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருந்ததாகவும் தகவல்கள் வெளியானது. இந்த விவகாரத்தில் குற்றவாளியை காப்பாற்ற முயல வேண்டாம் என உயர்நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தும் வகையில் பேசியுள்ளது.
Buy Now ! Pay Daily !
இந்த குற்றச்சாட்டுகள் மற்றும் ஜூலை மாதமே அளிக்கப்பட்ட புகாரின்மீது நடவடிக்கை எடுக்கப்படாதது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து எதிர்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன.
மு.க.ஸ்டாலின் கண்டனம்
அவ்வாறாக இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” உங்க அண்ணன், உங்க தாய்மாமன் என டயலாக் பேசும் முதலமைச்சருக்கு நான்கு மாதங்களுக்கு முன்பே மாவட்ட ஆட்சியர் புகார் கொடுத்தது தெரியுமா, தெரியாதா? தேசிய மகளிர் ஆணையமும், உயர்நீதிமன்ற நீதிபதியும் தலையிட்ட பின்னர்தான் ஒரு மாவட்ட ஆட்சியரின் புகாரே பதியப்படும் என்றால் தமிழ்நாட்டில் நடப்பது ஆட்சியா, இல்லை வேறெதுவுமா?
கூட்டுப் பாலியல் வன்கொடுமைப் புகாரில் சிக்கிய ஸ்ரீவைகுண்டம் MLA மீதும், மைதானத்தில் போதை மாத்திரை நசுக்கிய அமைச்சர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் த.வெ.க.வில் மற்றவர்களுக்கு பயம் இருந்திருக்கும். மாறாக, என்ன செய்தாலும் நாம் காப்பாற்றப்படுவோம், புகார் அளித்த பெண்களைத்தான் கட்சியில் இருந்து நீக்குவார்கள் என்ற மோசமான முன்னுதாரணங்களை முதலமைச்சர் விஜய் அனுமதித்துவிட்டார்.
'த.வெ.க. பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும்' என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள். இன்று, த.வெ.க.வினரின் தொல்லையில் இருந்து பாதுகாப்பு தேடிப் பெண்கள் ஓடும் நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த வழக்கை தமிழ்நாடு அரசு வசம் அல்லாமல் சிபிஐ மூலமாக விசாரிக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்த பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்த தலைமைச் செயலாளர் மீதும், மாவட்ட ஆட்சியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், தவெக எம்.எல்.ஏவை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழிசை சௌந்தர்ராஜன்
கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ” இப்பொழுது ஆட்சியரிடம் இருந்து புகார் வந்திருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது. குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சொன்ன சட்டமன்ற உறுப்பினர் என்ன சொல்லப் போகிறார் அமைச்சர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் ஏன் கூட்டணிக்கு பரிந்து பேசிய மாணிக் தாக்கூர் என்ன சொல்ல போகிறார்? பொய் சொல்வதை எவ்வளவு துணிச்சலாக சொல்கிறார்கள்? மறுபடியும் சொல்கிறோம் பெண்களைப் பாதுகாப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் விஜய் இப்பொழுதாவது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பதவியில் இருக்கும் பெண்களே இப்படி பரிதவிக்க வேண்டி இருக்கிறது என்றால், சாமானிய பெண்களுக்கு உதவி செய்ய இந்த அரசு எப்படி முன் வரும்? தாமாக புகார் அளிப்பது கூட தாமதமாகத்தான் முடிகிறது என்றால் தமிழ்நாட்டின் தங்கைகளின் நிலை என்ன? தவறு நிரூபிக்கப்பட்டால் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் அரசியலில் இருப்பதற்கே தகுதியற்றவர் ஆகிறார்” என தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின்
இந்த விவகாரம் குறித்து கண்டனம் தெரிவித்து பேசியுள்ள எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆட்சியரிடமிருந்து ஜூலை மாதமே புகார் வந்திருக்கும் நிலையில், புகாரே வரவில்லை என நீதிமன்றத்திலேயே பொய் கூறியிருக்கிறது தவெக அரசு என கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஆட்சியர் அளித்த புகாரை மறைத்து குற்றவாளியை காப்பாற்றுவதற்கு துணைப் போன தலைமைச் செயலாளர், அமைச்சர்கள், முதலமைச்சர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்டவர்களை முதலமைச்சர் விஜய் உடனே விடுப்பில் அனுப்ப வேண்டும் என்றும், நியாயமான விசாரணையை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கனிமொழி
இந்த சம்பவம் குறித்து பேசிய திமுக எம்.பி கனிமொழி, ”ஜூலை மாதமே மாவட்ட ஆட்சியர் புகார் அளித்திருந்தும், இத்தனை நாட்களாக இவர்கள் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்றத்திற்கு போன பிறகுதான் வழக்குப்பதிவு செய்திருப்பதாக கூறுகிறார்கள். இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாததால்தான் நீதிமன்றமே உத்தரவுகளை பிறப்பித்துள்ளது” என பேசியுள்ளார்.






