நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் – திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள சின்னக்கவுண்டம்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான குடிசை வீடுகளும் அமைந்துள்ளன. இந்நிலையில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அப்பகுதி மக்கள் அருகில் உள்ள கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்வதற்காகக் குவிந்திருந்தனர்.
அப்போது, அப்பகுதியில் வசித்து வந்த சேகர் மற்றும் செந்திலின் தாயார் பாப்பாயி ஆகியோருக்குச் சொந்தமான குடிசை வீடுகள் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கின. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தீ மேலும் பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தீயை அணைக்கப் போராடினர்.
Buy Now ! Pay Daily !
ஆனால், தீ மளமளவெனப் பரவி இரண்டு குடிசை வீடுகளையும் சூழ்ந்தது. இதற்கிடையே, தீ விபத்தில் சிக்கியிருந்த புதிய ஸ்ப்ளெண்டர் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் வெடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் தீ மேலும் தீவிரமடைந்து இரண்டு குடிசை வீடுகளும் முழுமையாக எரிந்து சேதமடைந்தன.
இந்தத் தீ விபத்தில் வீடுகளில் இருந்த அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள், கட்டில், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் உள்ளிட்டவை தீயில் கருகின. இதன் காரணமாகப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தங்களது உடைமைகளை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதற்கட்டத் தகவலின்படி, இந்தத் தீ விபத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அப்பகுதியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. அப்போது பட்டாசிலிருந்து தெறித்த தீப்பொறி குடிசை வீடுகளின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதங்கள் குறித்து வருவாய்த் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிசை வீடுகள் தீக்கிரையான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.






