நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே நேதாஜி நகரைச் சேர்ந்த அங்கப்பராஜ், போலி லாட்டரி விற்பனை மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், சூதாட்டத்திற்காகப் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு திருப்பிக் கொடுக்காமல் இருந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில், நள்ளிரவில் தனது ஓட்டுநர் நித்தியானந்தத்துடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்த போது அய்யன் தோட்டம் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் வழிமறித்து, அங்கப்பராஜை வலுக்கட்டாயமாகக் காரில் ஏற்றிக் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
Buy Now ! Pay Daily !
இதுகுறித்து ஓட்டுநர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்த நிலையில், அங்கப்பராஜின் மனைவி திலகா தனது கணவரை மீட்டுத் தரக்கோரி குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஈரோடு, சேலம், நாமக்கல் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் சூதாட்டப் பணப் பரிவர்த்தனை பிரச்சினையால் கடத்தல் நடந்ததா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






