நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே முறையான சாக்கடை வசதி இல்லாததால் திறந்தவெளியில் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் பெருகி வருவதாகப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பால் இரண்டு குழந்தைகள் அவதிப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு குடும்பமே கிராமத்தை விட்டு வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊனாந்தாங்கள் ஊராட்சியில் உள்ள சின்ன வரகூர் கோம்பை பகுதியில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்றும் செயல்பட்டு வருகிறது. இங்கு 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
Buy Now ! Pay Daily !
இந்த நிலையில், குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை முறையாக வெளியேற்றுவதற்கு இதுவரை சாக்கடை வசதி ஏற்படுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. கழிவுநீரை வெளியேற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குழாய்களும் உடைந்து சேதமடைந்துள்ளன. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், பள்ளிக்கு அருகிலுள்ள சாலையில் திறந்தவெளியில் வழிந்தோடி வருகிறது.
கடந்த பல மாதங்களாக இந்தப் பிரச்சினை நீடித்து வருவதால், அப்பகுதியில் கொசுக்களின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, அப்பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவரின் இரண்டு குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதனால் அச்சமடைந்த அவர் தனது குடும்பத்தினருடன் கிராமத்தை விட்டு வெளியேறி வேறு பகுதிக்குச் சென்றுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
தற்போது சாலையில் திறந்தவெளியில் கழிவுநீர் வெளியேறுவதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருவதால், அப்பகுதி மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப்பாக, பள்ளிக்குச் செல்லும் 80-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கும் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாகப் பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொதுமக்களின் சுகாதாரத்தையும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு சேதமடைந்த கழிவுநீர் குழாய்களைச் சீரமைக்க வேண்டும் என்றும், முறையான சாக்கடை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





