நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காடச்சநல்லூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி, 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட காடச்சநல்லூர் ஊராட்சியின் சத்யா நகர், கல்லாங்காடு, ராமதாஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக அடிப்படை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, முறையாகக் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என்றும், பொதுக் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Buy Now ! Pay Daily !
இதனால் குழந்தைகள், முதியவர்கள் எனப் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்டோர் பள்ளிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த அதிகாரிகளிடம் தங்களது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காதது குறித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், குடிநீர் தட்டுப்பாடு மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளால் அன்றாடம் சந்திக்கும் சிரமங்களையும் எடுத்துரைத்தனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் கோரிக்கைகள் மீது விரைவில் நடவடிக்கை எடுத்து, குடிநீர் மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.





