கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மூத்த பெண் அதிகாரிக்கு, தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், அவருக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை அளித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
பெண் அதிகாரி புகார்:
Buy Now ! Pay Daily !
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருள் விக்னேஷ் மீது பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தவும், விசாரணையை உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரி கண்காணிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். காவல்துறை ஐஜி காமினி விசாரணையை மேற்பார்வையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதையடுத்து புகார் அளித்த பெண் அதிகாரி மற்றும் வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் புகார் தொடர்பாக பெண் அதிகாரி நீதிமன்றத்திலும் ரகசிய வாக்குமூலம் அளித்தாகவும் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், நேற்று மாலை கள்ளக்குறிச்சியில் உள்ள தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டிற்குச் சென்ற சிறப்பு விசாரணைக் குழுவினர், அவரைக் கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர். கைது செய்யப்பட்ட அருள் விக்னேஷை தியாகதுருகத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர்.
புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், அதுதொடர்பான தகவல்கள் மற்றும் விசாரணையில் கிடைத்த விவரங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அரசு மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷிற்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அடுத்தகட்ட சட்ட நடைமுறைகளுக்காக போலீசார் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நீதிமன்றக் காவல்
இதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிபதி பானுமதி முன்பு எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது வழக்கு தொடர்பான விசாரணை மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்களை காவல்துறையினர் நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து அருள் விக்னேஷை 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க பொறுப்பு நீதிபதி பானுமதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து, அருள் விக்னேஷை கடலூர் மத்திய சிறையில் அடைப்பதற்காக போலீசார் அழைத்துச் சென்றனர்.
மேலும் கைது செய்யப்பட்ட எம்எல்ஏ அருள் விக்னேஷ் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
கள்ளக்குறிச்சியில் தொடங்கிய இந்தப் புகார் விவகாரம், சென்னை உயர் நீதிமன்றத்தின் தலையீடு, சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு, பெண் அதிகாரியின் வாக்குமூலம் என அடுத்தடுத்த கட்டங்களை எட்டிய நிலையில், இறுதியாக எம்.எல்.ஏ கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்காக அழைத்து செல்லப்பட்டதையடுத்து பரபரப்பு ஓய்ந்தது.
இருப்பினும் இந்த வழக்கில் காவல்துறையின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது





