திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தூணில் தீபம் ஏற்றுவது குறித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தமிழக அரசு தடைக் கோரி மேல்முறையீடு செய்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் முந்தைய தீர்ப்புகளை நிறுத்தி வைத்ததோடு, திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற நிபந்தனைகளோடு கூடிய புதிய தற்காலிக உத்தரவையும் பிறப்பித்தது. கார்த்திகை அன்று தூணில் தீபம் ஏற்றப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தீபம் ஏற்றப்படவில்லை.
இதுகுறித்து இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கிய நிலையில், ஆரம்பத்திலேயே இன்று உச்சநீதிமன்ற உத்தரவை மீறியது குறித்த விசாரணை மட்டுமே நடைபெறும், வேறு எந்த விவகாரமும் ஏற்றுக் கொள்ளப்படாது என உச்சநீதிமன்றம் கறாராக கூறிவிட்டது. அதை தொடர்ந்து நடந்த விவாதத்தில் தீபம் ஏற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக சொன்ன மாவட்ட ஆட்சியர் தரப்பு, இறுதி நேரத்தில் அறங்காவலர் குழு வழக்கமாக தீபம் ஏற்றும் இடத்திலேயே தீபம் ஏற்ற உள்ளதாக சொன்னதால் தூணில் தீபம் ஏற்ற இயலாமல் போனது என்று விளக்கம் அளித்தது.
Buy Now ! Pay Daily !
ஆனால் அதற்கு மத்திய தொல்லியல் துறை மறுப்பு தெரிவித்துள்ளது. நீதிமன்ற வாதத்தில் முறையிட்ட மத்திய தொல்லியல் துறை, சம்பவத்தன்று தீபம் ஏற்றப்பட உள்ள தூணை ஆய்வு செய்யச் சென்றதாகவும், ஆனால் போலீஸார் பாதி வழியிலேயே தங்களை நிறுத்திவிட்டதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ள நிலையில், அறங்காவலர் குழுவை கூட்டி விவாதிக்க வேண்டியதன் அவசியம் என்ன என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.
மேலும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு மீறப்பட்டுள்ள நிலையில், நாளையே மீண்டும் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் மறு உத்தரவிட வேண்டும் என்றும், ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து அதை கண்காணிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பிற்கு மாநில காவல்துறை அல்லாத மத்திய பாதுகாப்பு படை போன்ற அமைப்புகளை பயன்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் வாத பிரதிவாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், தங்களது தீர்ப்பை செயல்படுத்தாது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியின் பெயர்களை கேட்டுக் குறித்துக் கொண்டதுடன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக இன்றே உத்தரவு பிறப்பிக்கிறோம் என கூறி தீர்ப்பு வழங்குவதை 3.30க்கு ஒத்தி வைத்துள்ளனர். இந்த நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர், டிஜிபி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.






