தற்போது இந்தியாவில் மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளும், 245 ராஜ்யசபா சீட்டுகளும் உள்ளன. இந்தியா முழுவதும் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் நிர்வாக வசதிகளுக்காக பாராளுமன்ற தொகுதிகளை அதிகரிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வர மத்திய அரசு முயன்று வருகிறது.
ஆனால் மத்திய அரசின் இந்த மசோதாவிற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்து வந்தன. இந்நிலையில் நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் இந்த மசோதாவை கொண்டு வரவுள்ள மத்திய அரசு, இதில் அனைத்து மாநிலங்களும் பயன்பெறும் வகையில் சில மாற்றங்களை செய்துள்ளது.
Buy Now ! Pay Daily !
அதன்படி, 543 மக்களவைத் தொகுதிகளோடு மேலும் 273 தொகுதிகள் சேர்க்கப்பட்டு மக்களவை தொகுதி எண்ணிக்கை 816 ஆக உயர்த்தப்பட உள்ளது. மேலும் இந்த மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் மக்களவை தொகுதிகள் 50 சதவீதம் உயர்த்தப்பட்டு சீராக விரிவுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. அதோடு, ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசத்தின் சட்டமன்ற தொகுதிகளும் 50 சதவீதம் உயர்த்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஒரு மாநில சட்டமன்றத்தின் அதிகபட்ச உறுப்பினர் உச்சவரம்பு 500லிருந்து 650 ஆக உயர்த்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவோடே மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடும் கொண்டுவரப்படும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த தொகுதி மறுவரையறை மசோதா குறித்து இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் கலந்து ஆலோசித்த பிறகு இந்த மசோதாவால் மாநில அரசுக்கான நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் உயரும் என்பதாலும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும் என்பதாலும் இந்த மசோதாவிற்கு ஆதரவு வழங்க உள்ளதாக திமுக சார்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பல விஷயங்களில் மத்திய அரசுக்கு எதிராக நின்று வந்த திமுகவினர், தற்போது தொகுதி மறுவரையில் மத்திய அரசுக்கு ஆதரவான நிலைபாடு எடுத்தது பலரையும் ஆச்சர்யத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.






