விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற அரசியலமைப்பைப் பாதுகாக்கும் போராட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் உ.வாசுகி, போராட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமான எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை, பாஜக தேர்தலில் வெற்றிபெறுவதற்காகத் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் அரசியல் சதி என்று குற்றம்சாட்டினார். மேலும், இந்த நடவடிக்கையால் சுமார் 13.5 கோடி மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
Buy Now ! Pay Daily !
வாக்குரிமையைப் பாதுகாப்பது, ஜனநாயகத்தைக் காப்பது, அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பது ஆகிய மூன்று முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராடி வருவதாகக் குறிப்பிட்டார்.
பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் நாட்டின் மதச்சார்பற்ற தன்மையையும் அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளையும் மாற்ற முயற்சிப்பதாகவும், மதவாத அரசியல் மூலம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் விமர்சித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான புகாரில், தவறு செய்தவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் சட்டம் அனைவருக்கும் சமமாகப் பொருந்த வேண்டும் என்றார். இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க மூன்று மாதங்கள் தாமதமானது ஏன் எனக் கேள்வி எழுப்பிய அவர், தமிழக வெற்றிக் கழக அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சட்டத்துறை அமைச்சரின் கருத்து குறித்தும் மறுபரிசீலனை செய்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், முதலமைச்சர் தலையிட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
செஞ்சியில் சிறுமி மாயமான விவகாரத்தில், காவல்துறையினர் திறமையானவர்கள் என்றாலும் இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காதது ஏற்றுக்கொள்ள முடியாததாக இருப்பதாகக் கூறிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவு நியாயமற்றது என்பதே தங்கள் கட்சியின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்ட உ.வாசுகி, சங்கப் பரிவார அமைப்புகள் அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தைக் கையாள்வதாகக் குற்றம்சாட்டினார். அப்பகுதி மக்களின் நல்லிணக்க முயற்சியை வரவேற்றதுடன், தமிழக அரசின் நிலைப்பாட்டையும் வரவேற்பதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கீதா, மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.






