கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில், தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதாக ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
Buy Now ! Pay Daily !
மேலும், மாவட்ட ஆட்சியரின் முறையான புகாருக்காகக் காத்திருக்காமல் பொதுவெளியில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய டிஜிபி மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரியிருந்தார். குறுஞ்செய்தி தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்களைச் சேகரித்து பாதுகாக்கவும் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் மட்டும் காவல்துறைக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியுமா என நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளாரா, குறுஞ்செய்தி அனுப்பப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளனவா என்றும் வினவினார்.
அப்போது காவல்துறை தரப்பில், இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட யாரிடமும் புகார் அளிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதற்குப் பதிலளித்த மனுதாரர் தரப்பு, தேசிய மகளிர் ஆணையமே இந்த விவகாரம் குறித்து விளக்கம் கோரியுள்ள நிலையில், ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினரை உயர் அதிகாரிகள் பாதுகாப்பதாகக் குற்றம்சாட்டியது.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு தரப்பின் கருத்துகளைக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இன்று ஒத்திவைத்தார். மேலும், குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருப்பது உண்மையாக இருந்தால் அது துரதிர்ஷ்டவசமானது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் மனு விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட ஆட்சியரிடம் விசாரணை நடத்திய விவரங்களை காவல்துறை எழுத்துப்பூர்வ அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையை நீதிபதி நீதிமன்றத்தில் வாசித்தார்.
அப்போது, மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், இதுவரை புகார் அளிக்கப்படவில்லை எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது ஆட்சியரின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.






