நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாம் நாள் தீபத் திருவிழாவையொட்டி, இன்று அதிகாலை 4 மணியளவில் கோவில் கருவறை முன்புள்ள அர்த்தமண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றினர். இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 6 மணியளவில் கோவிலின் பின்புறம் அமைந்துள்ள 2,668 அடி உயர அண்ணாமலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதனைக் காணவும், 14 கிலோமீட்டர் தொலைவுள்ள மலையைச் சுற்றி கிரிவலம் செல்லவும் பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
Buy Now ! Pay Daily !
இதற்கிடையே கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மண் அகல் விளக்குகள் விற்பனை களைகட்டியுள்ளது. ரூ.10 முதல் ரூ.200 வரை பல்வேறு வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு வந்து ஆர்வத்துடன் விளக்குகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் தீபத் திருநாள் கொண்டாட்ட உற்சாகம் களைகட்டியுள்ளது.
ஸ்தம்பித்த திருவண்ணாமலை
தீபத் திருநாளை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காகத் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,500க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. இதற்கிடையே, நேற்று மாலை முதல் கனமழை மற்றும் சாரல் மழை பெய்து வரும் நிலையிலும், அதைப் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இதனால் திருவண்ணாமலைக்கு வரும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை – திருவண்ணாமலை சாலையில் புறவழிச்சாலை அருகே சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, உள்ளூர் வாசிகள் மற்றும் அரசு அலுவலர்கள் எனக் கூறி நகருக்குள் செல்ல முயன்ற வாகன ஓட்டிகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாற்றுப்பாதையில் செல்ல மறுத்த சில வாகன ஓட்டிகளின் வாகனங்களை போலீசார் தட்டி வழிமாற்றி அனுப்பியதால் பரபரப்பு நிலவியது.





