சிவகங்கை அருகே மேல பூங்கொடி பகுதியைச் சேர்ந்த சோனை (62) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு தரப்பினருக்கும் இடையே 19 சென்ட் நிலம் தொடர்பாக நீண்டகாலமாகப் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நிலம் சோனைக்குச் சொந்தமானது என அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தனக்குப் பட்டா வழங்கப்படவில்லை எனக் கூறி அவர் அதிருப்தியில் இருந்து வந்துள்ளார்.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில், இன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு வந்த சோனை, திடீரென தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரைத் தடுத்து மீட்டனர்.
இதையடுத்து, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். நீதிமன்றத் தீர்ப்பு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையிலும், பட்டா கிடைக்காத விரக்தியில் முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் 19 சென்ட் நிலம் தொடர்பாக நீதிமன்றம் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியும் பட்டா கிடைக்கவில்லை எனக் கூறி 62 வயது முதியவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.






