ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான லோவி இன்ஸ்டிட்யூட், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 27 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் பலத்தை, மொத்தம் 131 காரணிகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்துள்ளது.
பொருளாதாரத் திறன், ராணுவ வலிமை, தூதரகச் செல்வாக்கு, எதிர்கால வளங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட 8 முக்கிய அளவீடுகளின் கீழ் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில், அமெரிக்கா 78.9 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சீனா 73.6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. புவியியல் ரீதியாக அமெரிக்கா ஆசிய நாடாக இல்லாவிட்டாலும், இப்பிராந்தியத்தின் முக்கிய வர்த்தக மற்றும் பாதுகாப்புக் கூட்டாளியாக இருப்பதால் முதலிடத்தில் நீடிக்கிறது.
முதலிடத்தில் உள்ள அமெரிக்காவிற்கும், இரண்டாம் இடத்தில் உள்ள சீனாவிற்கும் இடையேயான புள்ளி வித்தியாசம் வெறும் 5.3 ஆகக் குறைந்துள்ளது. ராணுவத் திறனிலும் இரு நாடுகளுக்கும் இடையே மிகக் குறைந்த அளவிலான இடைவெளியே காணப்படுகிறது.
இந்தப் பட்டியலில் 40.5 புள்ளிகளுடன் இந்தியா 3-வது இடத்தைப் பிடித்து, ஆசியாவின் முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் வளர்ச்சிக்குக் காரணம் என்ன?
கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது, பாதுகாப்பு மற்றும் ராணுவத் திறன், எதிர்கால வளங்கள், கலாச்சாரத் தாக்கம் ஆகிய துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது.
குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பிரம்மோஸ் ஏவுகணை விற்பனை ஆகியவை பிராந்திய அளவில் இந்தியாவின் பாதுகாப்புத் தடத்தை வலுப்படுத்தியுள்ளன.
அதேநேரம், தூதரகச் செல்வாக்கு மற்றும் பொருளாதார உறவுகளில் இந்தியாவின் நிலை சீராக உள்ளதாகவும், பொருளாதாரச் செல்வாக்கில் மட்டும் மிகச்சிறிய அளவிலான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு 2-ஆம் இடம்
பிராந்திய அளவில் செல்வாக்கு மிக்க தலைவர்களுக்கான தரவரிசையில், சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு அடுத்தபடியாகப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். சர்வதேச அளவில் இந்தியாவின் நிலையை உயர்த்தியதில் பிரதமர் மோடியின் திறமையான தலைமை முக்கியப் பங்கு வகிப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து எதிர்க்கட்சிகள் முன்வைத்து வந்த விமர்சனங்களுக்குப் பாரதிய ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் நலிவடைந்துவிட்டதாகக் கூறி வந்த நிலையில், சர்வதேச அளவில் இந்தியா 'தசாப்தத்தின் வளர்ச்சியாக' அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் வினோத் தாவ்தே தெரிவித்துள்ளார்.
மேலும், பிரதமர் மோடியின் தலைமையின்கீழ் இந்தியாவின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாகவும் வளமாகவும் இருக்கும் எனப் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக, 2026-ஆம் ஆண்டிற்கான லோவி இன்ஸ்டிடியூட் அறிக்கையானது, ஆசிய பிராந்தியத்தின் அதிகாரச் சமநிலையில் இந்தியா ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு உணர்த்தியுள்ளது.






