தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்து 6 மாதங்கள் கடந்துள்ள நிலையில் இந்த குறுகிய காலத்திற்குள் பல்வேறு சர்ச்சைகளை, குற்றச்சாட்டுகளை சந்தித்துள்ளது. சமீபத்தில் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள்விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கே ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது.
இதுதவிர கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, தமிழகத்தில் காவிரி வழித்தடங்களில் அணைக்கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருப்பதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. ஆனால் இதுகுறித்து முதல்வர் விஜய் வாய் திறக்கவில்லையென எதிர்கட்சிகள் பேசி வருகின்றன.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் தமிழ்நாட்டில் தவெக அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு பாதுகாப்பில்லா நிலைமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் டிசம்பர் 2ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அதிமுக அறிவித்துள்ளது.
இதுகுறித்து நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ள அதிமுக, ” தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை; அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பது; தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் எனச் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை; மேகதாது பிரச்சினையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வரும் ரீல்ஸ் மாடல் த.வெ.க. அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!” என அறிவித்துள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் அதிமுகவின் அமைப்புரீதியாக செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களிலும் டிசம்பர் 2 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறும் என அதிமுகவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசுக்கு எதிராக கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏவும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுனரை சந்தித்த நிலையில், அதிமுகவும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






