சென்னை: தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்து எழுந்து வரும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் முதலமைச்சர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் தவெக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவு ஆட்சிக்கு முக்கியமானதாக உள்ளது. இதற்கிடையே, அமைச்சரவையில் இடம் பெறாத இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதனால் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
Buy Now ! Pay Daily !
மேலும், தவெக எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சிகள் நடைபெறுவதாக அக்கட்சியைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, தவெகவில் 60 முதல் 70 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகத் தெரிவித்த கருத்தும் அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் ஆகியோருடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முதலமைச்சரின் அரசு இல்லமான பாமணி இல்லத்தில் இன்று மதியம் 3 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு தனித்தனியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
என்னென்ன ஆலோசிக்கப்படலாம்?
இந்தக் கூட்டத்தில் கூட்டணியின் அரசியல் செயல்பாடுகள், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கடந்த 11-ம் தேதி தவெக எம்.எல்.ஏ.க்களுடன் விஜய் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், தற்போது கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்துவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளிடையே நிலவும் கருத்து வேறுபாடுகள் மற்றும் பரபரப்பான சூழலுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் இன்று கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இந்தக் கூட்டத்தில் அரசியல் நிலவரம் மற்றும் அடுத்தகட்ட சட்டமன்றச் செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.






