கார்த்திகை தீபத் திருநாள் நாளை நடைபெற உள்ள நிலையில், அந்நாளில் திருப்பரங்குன்றம் முருகர் கோவில் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் கடந்த ஆண்டே சென்னை உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்றன. இது தொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீபம் ஏற்ற புதிய தற்காலிக அனுமதி ஒன்றை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து மத அமைப்புகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளே அதேசமயம், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் இடதுசாரி அமைப்புகள் பல இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்து வருகின்றன.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.ம.க தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் தலைமையில் மதுரையில் ’மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு’ சார்பில் அமைதி பேரணி நடத்தப்பட இருந்தது. இதற்கு தற்போது காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. அதேபோல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் த.வெ.க கட்சியுடன் கூட்டணியில் உள்ள திருமாவளவனுக்கே பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளின் அடிப்படையிலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்த காவல்துறை, அனுமதி பெறாமல் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. நாளை தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் மதுரை முழுவதும் பல பகுதிகளில் போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.






