அப்போது பேசிய அவர், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், அதனைச் செயல்படுத்த வேண்டிய அறநிலையத்துறை ஆணையரே மறுஆய்வு மனு தாக்கல் செய்திருப்பதாகக் கூறினார். கோயில்களைப் பாதுகாப்பதும், பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும்தான் அறநிலையத்துறையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைப் பணத்தை வழக்கறிஞர் கட்டணம் உள்ளிட்ட செலவுகளுக்குப் பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது என்றும் விமர்சித்தார்.
மேலும், தமிழக அரசு இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டிய அவர், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது மத நல்லிணக்கத்திற்கு எதிரானது அல்ல என்றும், இந்துக்களின் வழிபாட்டு உரிமையை யாருக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் தெரிவித்தார். நூறு ஆண்டுகளுக்கு முன்பே தீபம் ஏற்றப்பட்ட இடத்தில் மீண்டும் தீபம் ஏற்ற வேண்டும் என்பதுதான் தங்களது கோரிக்கை என்றும் கூறினார்.
Buy Now ! Pay Daily !
திருப்பரங்குன்றம் விவகாரத்தை அரசியல் நோக்கத்துடன் தற்போதைய அரசு பெரிதுபடுத்துவதாகக் குற்றம் சாட்டிய அவர், அங்கு சென்று வழிபடுவதும் தீபம் ஏற்றுவதும் எவ்வாறு மத நல்லிணக்கத்திற்கு எதிராக அமையும் எனக் கேள்வி எழுப்பினார். மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் விமர்சித்தார்.
அரசியல் தலைவர்கள் திருமணம், துக்க நிகழ்ச்சிகள் மற்றும் பொது விழாக்களில் சந்தித்துப் பேசுவது இயல்பான நாகரிகம் என்றும், அதனை அரசியலாகப் பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார். வடஇந்தியாவில் ராமரையும், தென்னிந்தியாவில் முருகப்பெருமானையும் வைத்து அரசியல் செய்வதாகக் கூறப்படும் விமர்சனத்தையும் அவர் மறுத்தார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது இந்து முன்னணி மாநில பொது செயலாளர் முருகானந்தம் செந்தில்குமார் மாநிலச் செயலாளர் முத்துக்குமார் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஜெகன் மதுரை கோட்ட செயலாளர் பாலு உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.






