தென்னிந்தியத் திரையுலகில் அதுவும் குறிப்பாக தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை திரிஷா. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், 1999-ஆம் ஆண்டு ‘மிஸ் சென்னை’ அழகிப் பட்டம் வென்று திரைத்துறைக்குள் நுழைந்தார்.
ஜோடி படத்தில் சிறு வேடத்தில் அறிமுகமானாலும், ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ‘சாமி’, ‘கில்லி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘96’, மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
Buy Now ! Pay Daily !
கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் முன்னணி நாயகியாக வலம் வரும் திரிஷா தற்போதைய தமிழக முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து 2004-இல் ‘கில்லி’ திரைப்படத்தில் தொடங்கி ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’ ஆகிய படங்களிலும், பின்னர் 2023-இல் வெளியான ‘லியோ’ திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார்.
விஜய் தீவிர அரசியலில் களம் இறங்கியது முதலே, திரிஷாவின் பெயரும் அரசியல் வட்டாரங்களில் அவ்வப்போது விவாதிக்கப்பட்டு வருகிறது. இதற்கு வலுசேர்க்கும் விதமாக, முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழா மற்றும் சுதந்திர தின விழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் திரிஷா கலந்துகொண்டார்.
இதுமட்டுமின்றி, கடந்த செப்டம்பர் மாதம் இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் கார் பந்தயத்திலும், நவம்பர் 5-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பிலும் இருவரும் பங்கேற்றது பொதுவெளியில் அதிக கவனத்தை ஈர்த்தது.
அரசியலுக்குள் நுழைகிறாரா திரிஷா?
தமிழக அரசியல் களத்தில் திரைப்பிரபலங்களின் பெயரால் இயக்கங்கள் உருவாவது புதிதல்ல. அந்த வரிசையில் நடிகை திரிஷாவின் பெயரில் திருநெல்வேலியை மையமாகக் கொண்டு ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
நவம்பர் 23-ஆம் தேதி திருநெல்வேலி பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தப் பேரவையின் ஒருங்கிணைப்பாளரான ராஜகோபால் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். மேலும், பேரவையின் லோகோவையும் அவர் அறிமுகப்படுத்தினார்.
“பதவிக்காக அல்ல! தமிழக மக்களின் உரிமைக்காக!!” என்ற முழக்க வாசகம் அந்த இலச்சினையில் பொறிக்கப்பட்டுள்ளது பேரவையின் நோக்கத்தைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
ஏற்கெனவே சமூக வலைதளங்களில் ‘தியாகச் சுடர் திரிஷா பேரவை’ என்ற பெயரில் சுவரொட்டிகள் பரவிப் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நெல்லையில் ‘இளைய புரட்சித் தலைவி திரிஷா பேரவை’ முறைப்படி தொடங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற நிகழ்வுகள் திரிஷாவின் மேற்பார்வையில் தான் நடைபெறுகிறதா என்பது குறித்தான தகவல்கள் எதுவும் திரிஷா தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை.
தமிழக மக்களின் உரிமைக்காக எனக் கூறித் தொடங்கப்பட்டுள்ள இந்தப் பேரவை, வரும் காலங்களில் எத்தகைய செயல்பாடுகளை முன்னெடுக்கும் என்பது அரசியல் மற்றும் திரை வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.






