கன்னட திரையுலகில் அதிகமான ரசிகர்களை கொண்ட பிரபலமான நடிகராக உள்ளவர் தர்ஷன். இவர் நடிகை பவித்ராவிற்கு குறுஞ்செய்தி அனுப்பி தொல்லை செய்ததாக தனது ரசிகர் ரேணுகாசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். அவரோடு நடிகை பவித்ரா உள்பட 17 பேர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை பெங்களூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் முன்னர் அரசு தரப்பு சாட்சிகளாக இருந்த இருவர் பிறழ் சாட்சியாக மாறியது வழக்கின் போக்கை மாற்றியுள்ளது. ரேணுகாசாமியை காரில் கடத்தி வந்து பெங்களூரில் உள்ள ஒரு கார் பணிமனையில் வைத்து தாக்கியும், மின்சாரம் பாய்ச்சியும் ரேணுகாசாமியை தர்ஷன் கும்பல் கொன்றதாக வாகன நிறுத்திமிட பணியாளர்களான மல்லிகார்ஜூன் மற்றும் விஜய்குமார் அரசு சாட்சியாக காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்திருந்தனர்.
Buy Now ! Pay Daily !
ஆனால் நேற்று நீதிமன்ற விசாரணையின்போது அவர்கள் தர்ஷனுக்கு ஆதரவாக பிறழ்சாட்சியாக மாறி, தாங்கள் எதையும் பார்க்கவில்லை என்றும், தங்களுக்கு எதுவுமே தெரியாது என்றும் கூறியுள்ளனர். போலீஸில் அளித்த வாக்குமூலத்திற்கு எதிரான சாட்சியம் அளித்த அவர்கள் இருவரையும் எதிர் தரப்பு சாட்சிகளாக கருதுமாறு அரசு வக்கீல் கோரிய நிலையில், அவ்வாறே எதிர்சாட்சிகளாக ஏற்றுக் கொண்ட நீதிபதி, எதிர் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதித்து டிசம்பர் 3ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
ரேணுகாசாமி கொலை வழக்கில் முக்கிய சாட்சிகளில் இருவர் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளதால் தர்ஷன் மீதான வழக்கின் பிடி தளர்ந்து வருவதாக கூறப்படுகிறது. முன்னதாக இதேபோல இருவர் பிறழ்சாட்சியாக மாறிய நிலையில் மொத்தமாக இதுவரை நான்கு பேர் இந்த வழக்கில் பிறழ்சாட்சிகளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.






