உலகம் முழுவதும் மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர்ஹீரோ படங்களுக்கு பெருமளவில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008 முதலாக பல சூப்பர்ஹீரோ திரைப்படங்கள், வெப் சிரிஸ்களை மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. முன்னதாக ’அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ மூலமாக தானோஸ் என்ற மிகப்பெரிய வில்லனை தோற்கடித்த சூப்பர்ஹீரோக்கள் மீண்டும் பல ஆண்டுகள் கழித்து டாக்டர்.டூம் என்ற புதிய வில்லனை எதிர்கொள்கின்றனர்.
இந்த டாக்டர்.டூம் கதாப்பாத்திரத்தில் முன்னதாக மார்வெலில் அயர்ன்மேனாக நடித்த ராபர்ட் டோனி ஜூனியர் நடிப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் டிசம்பர் 18ம் தேதி வெளியாகும் நிலையில், இந்தியாவில் மட்டும் ஒருநாள் முன்னதாக டிசம்பர் 17ம் தேதியே வெளியாக உள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் ஹிட்டான நிலையில், படத்திற்கான முன்பதிவுகள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே தொடங்கப்பட்டுள்ளன.
Buy Now ! Pay Daily !
முன்பதிவில் சாதனை
முதற்கட்டமாக ஐமேக்ஸ் தியேட்டர்கள், மார்வெலின் Infinity Vision சான்றிதழ் பெற்ற தியேட்டர்களில் மட்டுமே முன்பதிவு தொடங்கியுள்ளது. முன்பதிவு தொடங்கி சில நாட்களிலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்த நிலையில், இதுவரையிலான நிலவரப்படி இந்தியா முழுவதும் ரூ.50 கோடிக்கு டிக்கெட் முன்பதிவுகள் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களான ராமாயணா, துரந்தர் 2 படங்களுக்கான முன்பதிவுகள் சில நாட்கள் முன்னதாக தொடங்கப்பட்டு ரூ.50 கோடியை எட்டியது சினிமா வட்டாரத்தில் சாதனையாக பார்க்கப்பட்டது. அந்த சாதனையை அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே நிகர் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சில தினங்களில் மற்ற திரையரங்குகளிலும் அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே முன்பதிவு தொடங்கப்பட்டால் விரைவில் இந்த சாதனையை அவெஞ்சர்ஸ் முறியடிக்கும் என கூறப்படுகிறது.
இதுவரையிலான முன்பதிவு ரெக்கார்டின் படி, 2024ல் வெளியான ’புஷ்பா-2’ திரைப்படம் டிக்கெட் முன்பதிவிலேயே ரூ.91 கோடி வசூலித்து இந்தியாவிலேயே டிக்கெட் முன்பதிவில் அதிகம் வசூலித்த படமாக உள்ளது. அந்த சாதனையை அவெஞ்சர்ஸ் முறியடிப்பார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தற்போது தமிழகத்தில் காலை 6 மணி முதல் நள்ளிரவு 2.30 வரை திரையரங்கில் காட்சிகள் திரையிடலாம் என்ற அனுமதி உள்ளதால் இந்த படத்தின் வசூல் முந்தைய படங்களை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






