மேட்டூர் அணையில் இருந்து போதிய தண்ணீர் கிடைக்காததால், இந்த ஆண்டு குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர்.
ஆனால், வடகிழக்கு பருவமழையின் காரணமாக வயல்களில் தண்ணீர் தேங்கி, நெற்பயிர்கள் சேதமடைந்தன. இதனால் பல விவசாயிகள் இரண்டு முதல் மூன்று முறை மீண்டும் விதைப்பு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
Buy Now ! Pay Daily !
இந்நிலையில், தற்போது 50 நாட்களைக் கடந்த சம்பா நெற்பயிர்கள் கதிர் விடும் பருவத்தை எட்டியுள்ளன. இந்த முக்கியமான தருணத்தில், வீராணம் ஏரி பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் இல்லாததால், பயிர்கள் காய்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
பயிர்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் மோட்டார் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதுடன், தண்ணீரையும் விலைக்கு வாங்கி வயல்களுக்கு வழங்கி வருகின்றனர். இதனால் ஏற்கனவே நஷ்டத்தில் தவித்து வரும் விவசாயிகளுக்கு கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் இருந்து தற்போது தினமும் சுமார் 100 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதாகவும், குடிநீர் தேவைக்காக மட்டுமே தண்ணீர் வழங்கப்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பா பயிர்களைக் காப்பாற்றும் வகையில், பாசன வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏற்கனவே மழை மற்றும் வெள்ளத்தால் பயிர்களை இழந்து, கடன் சுமையில் தவித்து வரும் விவசாயிகள், தற்போது தண்ணீரையும் விலைக்கு வாங்கிப் பாசனம் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, இப்பகுதியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் இழப்புகளைக் கணக்கிட்டு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், கருகும் நிலையில் உள்ள சம்பா பயிர்களைக் காப்பாற்றவும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.






