← முகப்புகடலூர் →

கடலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் 14 பேர் மாயம்? – காவல்துறை விளக்கம்!

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் 4 சிறுமிகள் உட்பட 14 பேர் காணாமல் போனதாக வெளியான தகவல் பொதுமக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, ஒரே நாளில் 12 பேர் காணாமல் போனதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் 2 நாட்களில் 14 பேர் மாயம்? – காவல்துறை விளக்கம்!

கடந்த நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இதில், குறிஞ்சிப்பாடி அருகே காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவல்லி மற்றும் அவரது 5 வயது மகள் ஆகியோர் கடந்த 12-ஆம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

அதேபோல், நெய்வேலியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி, பண்ருட்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி, அரியலூர் மாவட்டம் தளவாய் கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் உள்ளிட்டோரும் காணாமல் போயுள்ளனர்.

மேலும், குமாரப்பேட்டையைச் சேர்ந்த 23 வயது பெண் மற்றும் காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூரைச் சேர்ந்த 21 வயது பெண் உள்ளிட்ட பலரும் காணாமல் போனதாக புகார்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில், நவம்பர் 11-ஆம் தேதி 6 பெண்கள், ஒரு சிறுமி என 7 பேரும், நவம்பர் 12-ஆம் தேதி 4 பெண்கள், 3 சிறுமிகள் என மேலும் 7 பேரும் காணாமல் போனதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன்படி இரண்டு நாட்களில் 10 பெண்கள், 4 சிறுமிகள் என மொத்தம் 14 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியானது.

இதற்கிடையே, கடந்த நவம்பர் 11-ஆம் தேதி பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மட்டும் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஒரே நாளில் 12 பேர் காணாமல் போனதாக வெளியான செய்தி தவறானது என்றும் காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.

மேலும், அந்த 12 வழக்குகளில் இரண்டு பேர் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களில் சிலர் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, 2026-ஆம் ஆண்டு இதுவரை கடலூர் மாவட்டத்தில் காணாமல் போனதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் மொத்தம் 1,055 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருபுறம் இரண்டு நாட்களில் 14 பேர் காணாமல் போனதாக வெளியான தகவலும், மறுபுறம் ஒரே நாளில் 12 பேர் மாயமானதாக வெளியான செய்திக்கு காவல்துறை அளித்துள்ள விளக்கமும் கவனத்தைப் பெற்றுள்ளன.

காணாமல் போன அனைவரையும் விரைந்து கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !