← முகப்புநாமக்கல் →

திருச்செங்கோடு அருகே கத்திக்குத்து காயங்களுடன் பெண் கொலை – கணவர் மாயம்!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சின்ன பாலுத்து தெரு பகுதியைச் சேர்ந்த மறைந்த மாரியப்பனின் மகன் கணேசன் (26). இவர் லாரி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரசிகா (21). இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 வயதில், ஒன்றாம் வகுப்பு படிக்கும் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

திருச்செங்கோடு அருகே கத்திக்குத்து காயங்களுடன் பெண் கொலை – கணவர் மாயம்!

கணேசனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாக கணவனைப் பிரிந்த ரசிகா, அதே தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவரது பெரியப்பா மகன் வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிக்காக கணவருடன் ரசிகா சென்றுள்ளார். அப்போது இருவரும் சமாதானம் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், தற்போது குடியிருக்கும் வீட்டில் பாம்பு தொல்லை இருப்பதால் வேறு வீட்டிற்குச் செல்லலாம் எனக் கணேசன் கூறியுள்ளார். இதற்காக ஒரு வீட்டில் 5 ஆயிரம் ரூபாய் முன்பணமும் கொடுத்துள்ளார். மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயைக் கொடுக்க வேண்டிய நிலையில், அந்தத் தொகையை வாங்குவதற்காக இன்று காலை 10.30 மணியளவில் ரசிகாவை கணேசன் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்நிலையில், செங்கோடம்பாளையம், சண்முகபுரம் – களரங்காடு சாலையில் உள்ள தனியார் டெக்ஸ்டைல் மில்லின் பின்புறம், குமரன் கோவில் அருகே உள்ள காலி இடத்தில் காட்டுப் பகுதியில் ரசிகா கத்திக்குத்து காயங்களுடன் சடலமாகக் கிடந்துள்ளார்.

மாலை சுமார் 4.30 மணியளவில் அந்த வழியாகச் சென்றவர்கள் சடலம் கிடப்பதைக் கண்டு ஊரக போலீசாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், அப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள் அளித்த தகவலின் பேரில் திருச்செங்கோடு ஊரக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரசிகாவின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இதுகுறித்து திருச்செங்கோடு ஏ.எஸ்.பி. அஸ்வினி நேரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளார். ரசிகாவை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்ற கணேசனின் செல்போன் தற்போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால், அவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் புல் புதருக்குள் ரத்தக்கறையுடன் கத்தி ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து போலீசார் மோப்ப நாயை வரவழைத்தும், கைரேகை நிபுணர்களைக் கொண்டும் விசாரணை நடத்தினர். சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் பின்னர் அங்கேயே நின்றது.

மேலும், சம்பவ இடத்தில் கிடைத்த கத்தியிலிருந்த கைரேகைகள் மற்றும் அப்பகுதியில் இருந்த கால்தடங்களை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !