சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பயண நெரிசலைக் குறைக்கும் வகையில், தெற்கு ரயில்வே சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி கொல்லம், ஹைதராபாத், சார்லாப்பள்ளி இடையே சிறப்பு ரயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக, கொல்லத்தில் இருந்து நவம்பர் 17-ம் தேதி காலை 10.55 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (07190), மறுநாள் புதன்கிழமை இரவு 7 மணிக்கு சார்லாப்பள்ளி ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த ரயில் தமிழகத்தில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்பட உள்ளது.
Buy Now ! Pay Daily !
அதேபோல், டிசம்பர் 5-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்கு ஹைதராபாத் ரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு விரைவு ரயில் (07193) புறப்படும். மூன்றாவது நாளான திங்கள்கிழமை காலை 7.15 மணிக்கு இந்த ரயில் கொல்லத்தைச் சென்றடையும்.
மேலும், நவம்பர் 26-ம் தேதி முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்கு சார்லாப்பள்ளியில் இருந்து புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (07180), ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.55 மணிக்கு கொல்லத்தை அடையும்.
இதுதவிர, நவம்பர் 22-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.45 மணிக்குப் புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில் (07195), செவ்வாய்க்கிழமைகளில் காலை 7.55 மணிக்கு கொல்லத்தைச் சென்றடையும் வகையில் இயக்கப்பட உள்ளது.
இதனுடன், டிசம்பர் 30 முதல் ஜனவரி 13 வரையிலும், ஜனவரி 1 முதல் 15 வரையிலும் சார்லாப்பள்ளி - கொல்லம் இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு வாராந்திர ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை சீசனில் ஐயப்ப பக்தர்கள் சிரமமின்றிப் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.






