இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. மக்கள் தங்களது வருமானத்தில் ஒரு பகுதியை நகை, நிலம், வங்கி வைப்பு எனப் பல்வேறு வழிகளில் முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும், பாதுகாப்பான முதலீட்டை விரும்புவோருக்கு அரசு ஆதரவுடன் செயல்படும் அஞ்சலக சேமிப்புத் திட்டங்கள் சிறந்த தேர்வாக உள்ளன. அந்த வகையில், மாதந்தோறும் சிறிய தொகையைச் சேமித்து நீண்ட காலத்தில் கணிசமான வருமானத்தைப் பெற உதவும் அஞ்சலகத் தொடர் வைப்புத் திட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அஞ்சலகத்தில் செயல்படும் பல தொடர் வைப்புத் திட்டங்கள் (RD), சிறிது சிறிதாக மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைச் சேமிக்க விரும்பும் நடுத்தர குடும்பத்தினருக்கு மிகவும் உதவியாக உள்ளது. அந்த வகையில் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.100 முதல் மாதத் தவணையாகச் செலுத்தி கணக்கைத் தொடங்கலாம். தனிநபர் அல்லது கூட்டுக் கணக்காக தொடங்கும் வசதியும் இத்திட்டத்தில் உள்ளது.
Buy Now ! Pay Daily !
தற்போது இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதற்கான வட்டி மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என கணக்கிடப்படுகிறது. இத்திட்டத்தின் முதிர்வுக் காலம் 5 ஆண்டுகள். வேண்டுமெனில், மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம். நீட்டிக்கப்பட்ட காலத்திலும் கணக்கு தொடங்கியபோது நடைமுறையில் இருந்த வட்டி விகிதமே பொருந்தும்.
மாதம் ரூ.15,000 சேமித்தால் எவ்வளவு கிடைக்கும்? ஒருவர் மாதந்தோறும் ரூ.15,000 செலுத்தினால், 5 ஆண்டுகளில் மொத்தம் ரூ.9 லட்சம் முதலீடு செய்திருப்பீர்கள் .அதற்கு 6.7 சதவீத வட்டி அடிப்படையில், முதிர்வின்போது சுமார் ரூ.10.70 லட்சம் கிடைக்கும்.
இந்தக் கணக்கை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தொடர்ந்து மாதத் தவணைகளைச் செலுத்தினால், மொத்தம் ரூ.25.62 லட்சம் வரை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்தத் தொகை கணக்கீட்டின் அடிப்படையில் மாறுபடலாம். எனவே அஞ்சலகத்தில் முதிர்வுத் தொகையை பற்றி முன்பே உறுதிப்படுத்திக் கொள்ளவது நல்லது.
திட்டத்தில் சேர்வதற்கு முன்பு கவனிக்க வேண்டியவை - மாதத் தவணையை உரிய தேதியில் செலுத்த வேண்டும். - தவணை செலுத்தத் தவறினால் அபராதம் விதிக்கப்படும். - தொடர்ந்து நான்கு தவணைகள் செலுத்தப்படாவிட்டால் கணக்கு முடக்கப்படும் அபாயம் உள்ளது. - மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே கணக்கை முடிக்கும் வசதியும் உள்ளது.
உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட எதிர்காலத் தேவைகளுக்காக மாதந்தோறும் சேமிக்க விரும்புவோர் இத்திட்டத்தின் விதிமுறைகளை அறிந்து கவனத்துடன் முதலீடு செய்யுங்கள்.






