தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானக் கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. கனிம விற்பனையாளர்கள், குவாரி உரிமையாளர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் இந்தத் தீர்ப்பு கவனம் பெற்றுள்ளது.
தடை விதிக்கப்பட்டதன் பின்னணி என்ன: தமிழ்நாட்டில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கனிமங்கள் தட்டுப்பாடின்றிக் கிடைக்கவும், செயற்கையான விலை உயர்வைத் தடுக்கவும் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
Buy Now ! Pay Daily !
இதன் ஒரு பகுதியாக, கடந்த ஜூலை 9-ம் தேதி கனிமப் போக்குவரத்து தொடர்பான விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, ஜூலை 27-ம் தேதி முதல் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளைத் தவிர மற்ற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. பின்னர் இந்தத் தடை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து , 2027 ஜனவரி 26-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
கேரள முதலமைச்சரின் கடிதம்: இந்தத் தடையால் கேரள மாநிலத்தின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, அம்மாநில முதலமைச்சர் வி.டி. சதீசன், தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு கடிதம் எழுதினார். அதில், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படும் கனிமங்கள், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், கனிமப் பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தேசிய நெடுஞ்சாலைப் பணிகள், முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் தாமதமடையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே, கேரளாவின் தேவையைக் கருத்தில் கொண்டு தடையை மறுபரிசீலனை செய்து தளர்வு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தார்.
இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் மகாபலிபுரத்தில் நடைபெற்ற தென்மண்டலக் குழுக் கூட்டத்தின்போது இரு மாநில முதலமைச்சர்களும் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். அதன் பிறகு, கேரளாவுக்கு விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
உயர் நீதிமன்றத்தின் தற்போதைய உத்தரவு: இதற்கிடையே, கனிமங்களைக் கொண்டு செல்ல விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து குவாரி உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து தொடர்பானவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வெளிமாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்லத் தடை விதிக்க வழிவகுத்த தமிழ்நாடு அரசின் திருத்த விதிகள் அரசியலமைப்புக்கு எதிரானவை எனக் குறிப்பிட்டு, தடையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் கருங்கல், ஜல்லி உள்ளிட்ட கட்டுமானக் கனிமங்களை வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்வதில் இருந்த அனைத்து கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு தமிழகத்தின் கனிமவள வணிகத்தில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது.
தமிழகத்தின் கனிமவளப் பாதுகாப்பு ஒருபுறம், கேரளாவின் கட்டுமானத் தேவை மறுபுறம் என இரு மாநிலங்களின் நிலைப்பாடுகளும் மோதிய நிலையில், தற்போது தடை நீங்கியுள்ளது. இதனால் கனிமங்களின் விலை, கட்டுமானப் பணிகள் மற்றும் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் என்ன மாற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.






