ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலையில் அமைந்துள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்ற ஆலயமாகும்.
நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்கின்றனர்.
Buy Now ! Pay Daily !
தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்காக பணம், வெள்ளி, தங்கம் போன்ற பொருட்களை காணிக்கையாக வழங்குவர். மேலும் இந்தியாவிலேயே அதிக வருவாய் ஈட்டப்படும் கோவிலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளது.
இந்நிலையில் தனது வேண்டுதல் நிறைவேறியதற்காக தமிழகத்தைச் சேர்ந்த வர்தமான் ஜெயின் என்ற பக்தர் ஒருவர், ரூ.140 கோடி மதிப்பில் 121 கிலோ தங்க ஆபரணங்களை காணிக்கையாக அளித்துள்ளார்.மொத்தம் 9 தொகுப்புகளில் 45 வகையான ஆபரண தங்க நகைகள் வழங்கப்பட்டுள்ளன.

46 விதமான தங்க ஆபரணங்களின் லிஸ்ட்
- வெங்கடேஸ்வரர் கடவுள் ஆபரணங்களாக 106 கிலோ தங்கம்
- பத்மாவதி தேவிக்காக 15 கிலோ தங்கத்தில் நெய்யப்பட்ட துணி
- தங்கக் காலணிகள் - 3
- தங்கக் கொலுசுகள் - 3
- தங்க நாணயங்கள்
- தங்கத் துளசிபாத்திர மாலை
- தங்க அஷ்டோத்தர நாணயங்களால் ஆன மாலை
- தங்க நாற்கோண லட்சுமி மாலை
- தங்கப் புலி நகப் பதக்கம்
- தங்க அஸ்வத்பாத்திர மாலை
- சாதாரண தங்கப் பட்டை
- தங்க இடுப்புச் சங்கிலி
- தங்க சூர்ய கட்டாரி
- தங்க கௌஸ்துபம்
- தங்க ஸ்ரீவத்ஸம்
- தங்க முழங்கை
- தங்க உள்ளங்கை
- தங்க நாகபரன் இடுப்புப் பட்டை
- தங்கப் பசு
- தங்க ஐந்தடுக்கு காந்தி மாலைகள்
- 5 தங்கப் பிறை நிலா மாலை
- தங்க வைகுந்த ஹஸ்தம்
- தங்க கட்டி ஹஸ்தம்
- தங்க நாகபரன் கொலுசு
- 4 தங்க புஜகீர்த்திகள்
- 3 தங்க கர்ணபாத்திரங்கள்
- 3 தங்க பாவலிகள்
- 3 தங்க சாளிகிராம மாலைகள்
- 3 தங்க தாமரை வடிவ சாளிகிராமங்கள்
- 3 தங்க யக்ஞோபவீதம்.
மேலும் சங்கு, தங்கச் சக்கரக் கவசம், தங்க முகப்பட்டி, தங்கக் கிரீடம், 2,427 காரட் எடையுள்ள நீலமணிகள், மாணிக்கங்கள், மரகதங்கள், மஞ்சள் நீலமணிகள் பதிக்கப்பட்ட ஸ்ரீவத்ஸம் பதக்கம், 238.2 காரட் எடையுள்ள வைரங்கள் பதிக்கப்பட்ட ஆபரணம்.

எதற்காக இவ்வளவு பெரிய காணிக்கை?
வர்தமான் ஜெயின் அமெரிக்கா செல்வதற்கு முன், தனது தொழிலில் வெற்றி பெற வேண்டும் என ஏழுமலையானிடம் பிரார்த்தனை செய்திருந்தார்.
அமெரிக்கா சென்ற பின்னர் அங்கு ஒரு தகவல் தொழில்நுட்பம் தொடங்கி, அதில் 60% சதவிகித பங்குகளை விற்றதன் மூலம், ரூ.6000 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளார்.
இந்த லாபத்தில் ஒரு பகுதியை சமூக நலப்பணிகளுக்கும், ஏழுமலையானுக்கான காணிக்கையாகவும் அளிக்கவும் அவர் முடிவு செய்தார். அதன்படி திருப்பதிக்கு வந்த அவர் பெட்டி பெட்டியாக ஆபரண தங்க நகைகளை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
ஆகம விதிகளின்படி உருவான சிறப்பு ஆபரணங்கள்
ஏழுமலையானின் திருமுடி முதல் திருப்பாதம் வரை அணிவிக்கும் வகையில், இந்தத் தங்க ஆபரணங்கள் மிகுந்த நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கைதேர்ந்த கைவினைக் கலைஞர்களைக் கொண்ட குழு, சுமார் 15 மாதங்கள் உழைத்து ஆகம சாஸ்திர மரபுகளின்படி இவற்றை உருவாக்கியுள்ளது.
கிரீடம், சங்கு, சக்கரம், ஒட்டியாணம், தோள் மற்றும் கை அணிகலன்கள், பத்ம பாதங்கள் எனப் பல வகைகளில், சுமார் 40 முதல் 45 வகையான பாரம்பரிய ஆபரணங்கள் ஒன்பது தொகுப்புகளாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
சந்தை மதிப்பின் அடிப்படையில் இந்தத் தங்க ஆபரணங்கள் சுமார் ரூ.160 கோடி முதல் ரூ. 161 கோடி வரை மதிப்பிடப்பட்டுள்ளன. திருப்பதி தேவஸ்தானத்திற்கு தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக வழங்கிய காணிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
திருப்பதியில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில், முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் வர்தமான் இந்த நகைகளைத் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்திடம் முறைப்படி வழங்கினார்.
சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆபரணங்கள், திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்படுகின்றன.
தொடர்ந்து, அபிஷேக வைபவங்களுக்குப் பிறகு இந்தப் புதிய ஆபரணங்களால் ஏழுமலையான் அலங்கரிக்கப்படுவார் என்று தேவஸ்தானத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தமானின் தொடரும் சேவை
வர்த்தமான் ஜெயின் இதற்கு முன்னரே திருப்பதி தேவஸ்தானத்திற்குப் பல நிலைகளில் உதவிகளைச் செய்து வந்துள்ளார்.
முன்னதாக, மின்சாரப் பேருந்துகள், ஸ்ரீ வெங்கடேஸ்வர பக்தி சேனல் மேம்பாட்டிற்கு ரூ. 7 கோடி, கோசாலையில் கால்நடைத் தீவனக் கலவை ஆலை அமைக்க ரூ. 5 கோடி, உண்டியல் நாணயங்களை எண்ணும் இயந்திரத்திற்காக ரூ.1 கோடி எனப் பல்வேறு திட்டங்களுக்கு நிதியளித்துள்ளார்.
ஏற்கெனவே பெருமளவிலான தங்க இருப்பைக் கொண்டுள்ள திருமலை கோயிலுக்கு, இப்போது 121 கிலோ எடையிலான கலைநயம் மிக்க நகைகள் சேர்ந்துள்ளன. பாரம்பரியக் கலைத்திறனும் பக்தியும் இணையும் இந்தக் காணிக்கை, திருப்பதி கோயிலின் ஆன்மிகப் பாரம்பரியத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகப் பதிவாகியுள்ளது.






