பெற்றோரை கைவிடும் பிள்ளைகள்
குழந்தை பிறந்தது முதல் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை அவர்களுக்கான ஒவ்வொன்றையும் பார்த்து கவனித்து செய்து தருபவர்கள் பெற்றோர்கள். பல பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் கஷ்டப்படும் சூழல் வந்துவிடக் கூடாது என்று, கடன் வாங்கியாவது நல்ல பள்ளி, கல்லூரிகளில் படிக்க வைப்பது, அவர்கள் தேவைகளை நிறைவேற்றி வைப்பது என கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கின்றனர். ஆனால் அப்படி பெற்றோர்களால் வளர்ந்த குழந்தைகள் தங்களுக்கென ஒரு குடும்பம் வந்ததும், அந்த பெற்றோர்களையே அனாதையாக விட்டுவிடுவது எவ்வளவு பெரிய அநியாயம்.
Buy Now ! Pay Daily !
தற்போதைய நவீன காலத்தில் பலர் பணம் சார்ந்து யோசிப்பவர்களாகவே வளர்ந்து வருவதன் விளைவு, பந்த பாசங்களை மறந்து வாழ்கின்றனர். பெற்றோரை அனாதையாக விட்டுச் செல்வது என்பது அவர்களை தெருவில் விட்டுவிடுவது மட்டுமல்ல, கூட வைத்து பராமரிக்க சோம்பல் பட்டுக் கொண்டு பணம் கட்டி முதியோர் விடுதிகளில் சேர்த்து விட்டுவிடுதல் உள்ளிட்டவையும் ஒரு வகையில் அவர்களை அனாதையாக விட்டுவிடுதல்தான். தன்னை தன் பிள்ளைகள் எதிர்காலத்தில் பார்த்துக் கொள்வார்கள் என நம்பி தனது சொத்துகளை பிள்ளைகளுக்கு வழங்குகின்றனர். ஆனால் அவற்றை பெற்றுக் கொண்டு பெற்றோரை கைவிடும் பிள்ளைகள் எத்தனை?
உலக நாடுகளில் முதுமை பிரச்சினை
ஜப்பானில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், பல ஜப்பானிய கிராமங்களில் முதியவர்கள் இறந்தது கூட தெரியாமல் அவர்கள் உடல் மாதக் கணக்கில் வீட்டிற்குள்ளேயே கிடந்து கண்டெடுக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க குழந்தைகள் பிறப்பை கட்டுப்படுத்தியதன் விளைவாக அடுத்த சில ஆண்டுகளில் சீனாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என சீன அரசு கண்டறிந்துள்ளது. இதனால் சீனர்கள் காதலிக்கவும், குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும், குடும்ப உறவை நல்ல முறையில் பேணவும் ஆண்டுதோறும் சீனா கோடிக்கணக்கில் செலவு செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இப்படியாக உலகம் முழுவதிலும் முதுமையடைவதும், அவர்களை பராமரிக்க குடும்பம் இல்லாததும் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது.
கேரளா புதிய சட்டம்
இவ்வாறாக பெற்றோரை அனாதையாக தவிக்க விடுபவர்களை தண்டிப்பதற்காக முதல்முறையாக கேரளாவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்புக்காக கேரளா அரசு இயற்றியுள்ள இந்த சட்டத்தின்படி, பெற்றோரிடம் சொத்துகளை பெற்றுக் கொண்டு அவர்களை கைவிட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டம் குறித்து பேசிய கேரள முதல்வர் வி.டி.சதீசன் ”உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் முதியோர் உரிமையை காக்க சட்டம் இயற்றியுள்ளோம். சட்டம் அமலுக்கு வந்ததும், சொத்துகளை அபகரித்துக் கொண்டு பெற்றோரை கைவிட்டவர்கள் சிறைக்கு செல்ல நேரிடும்” என கூறியுள்ளார்.
இந்த புதிய சட்டம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள நிலையில் ஒரு அரசாங்கம், பிரஜைகளை சிறைக்கு செல்ல நேரிடும் என்று மிரட்டி பெற்றோரை பராமரிக்கச் சொல்வதை விட, மக்களுக்கே அப்படியான அன்பும், அனுசரணையும் ஏற்படும் வகையிலான சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.






