திருவள்ளூர் அடுத்த நடுகுத்தகை பகுதியைச் சேர்ந்த ஃபெரிக் என்பவர், காக்களூர் பைபாஸ் சாலையில் ‘சிகரம் தொடு சிட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற பெயரில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான சாதாரண மற்றும் சிறப்புத் திட்டங்களின் கீழ் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக ஏலச்சீட்டு எடுத்த வாடிக்கையாளர்களுக்கு உரிய தொகையை வழங்காமல் நிறுவனம் காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பணம் செலுத்தியவர்கள் தங்களுக்குச் சேர வேண்டிய தொகையைக் கேட்டு தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த 16ஆம் தேதி வாடிக்கையாளர்களிடம் மறுநாள் காசோலை வழங்கப்படும் என நிறுவனத்தினர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Buy Now ! Pay Daily !
ஆனால், நிறுவன உரிமையாளர் ஃபெரிக்கின் செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த வாடிக்கையாளர்கள், நேற்று காலை 9 மணியளவில் நிறுவனத்தில் திரண்டனர். அங்கிருந்த ஊழியர்களிடம் பணம் குறித்துக் கேட்டபோது முறையான பதில் கிடைக்காததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீசார், நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் 250-க்கும் மேற்பட்டோர் இந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்களாக இருப்பதால் பல கோடி ரூபாய் அளவுக்குப் பணம் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில் வாடிக்கையாளர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்






