← முகப்பு

வெடித்த ’அரோகரா’ சர்ச்சை! ’புஷ்பவனம்’ குப்புசாமி அளித்த விளக்கம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் அன்று முதல்வரை புகழ்ந்து பாடிய சம்பவம் சர்ச்சையான நிலையில் அதுகுறித்து பாடகர் புஷ்பவனம் குப்புசாமி விளக்கமளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

வெடித்த ’அரோகரா’ சர்ச்சை! ’புஷ்பவனம்’ குப்புசாமி அளித்த விளக்கம்!

ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் நேற்று முன்தினம் சூரசம்ஹார விழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. சூரன் வதம் காண லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூரில் குவிந்திருந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு வசதிகளையும், ஏற்பாடுகளையும் செய்திருந்தது. அப்படியாக பக்தர்களுக்காக கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பிரபல கிராமிய பாடகர்கள் புஷ்பவனம் குப்புசாமி, வேல்முருகன் உள்ளிட்ட பலர் முருகர் பாடல்களை பாடினர். அப்போது சூரன் வதம் நிகழ்வின்போது, மைக்கில் ’முருகனுக்கு அரோகரா’ என்பதை தாண்டி, முதலமைச்சருக்கு ’அரோகரா’, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்கு ’அரோகரா’ என கோஷமிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பாடும்போது முதல்வர் விஜய்யை, முருக கடவுளோடு ஒப்பிட்டு பாடியதாக அவர் மீதும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில் வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை, பாஜக தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள், ஆன்மீக நிகழ்வில் அரசியல் செய்யப்படுவதாகவும், இது இந்து மக்கள் உணர்வை புண்படுத்தும்படி உள்ளதாகவும் கண்டனம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து தற்போது பாடகர் புஷ்பவனம் குப்புசாமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் நான் தவறாக எந்த பாடலையும் பாடவில்லை என கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது ”நான் தவறாக பாடவில்லை. ’நம் தமிழக முதல்வர் போல் வேலெடுத்து பகை முடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றி நிச்சயமுண்டு’ என்று பாடினேன். அதாவது தமிழக முதல்வர் விஜய் அவர்கள் முருகனை வேண்டி வெற்றி பெற்றது போல, நாமும் நமது விருப்பங்களை வேலெடுத்து பகைமுடித்த முருகனிடம் வேண்டிக் கொண்டால் வெற்றிக் கிடைக்கும் என்ற அர்த்தத்தில்தான் நான் அவ்வாறு பாடினேன். ஏராளமான முருகர் பாடல்களை பாடியுள்ளேன். நான் தவறாக பாடுவேனா?” என விளக்கமளித்துள்ளார்.

இதற்கு முன்னதாக மதுரையில் பிரபலமான அழகர் திருவிழாவில் பலர் தவெக கொடிகளை ஏந்தியதும், TVK என கோஷமிட்டதும் சர்ச்சைக்கு உள்ளாகியது. அதை தொடர்ந்து தற்போது திருச்செந்தூரிலும் தவெக தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளது. தொடர்ந்து ஆன்மீக இடங்களில் அரசியல் ரீதியாக எழும் கோஷங்கள் சர்ச்சையை சந்தித்து வரும் நிலையில் பக்தர்கள் பலர் இந்த போக்கு குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !