திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட வடதில்லை பகுதியில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான வாத்துப் பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மழையின்போது சில நாட்களிலேயே 300-க்கும் மேற்பட்ட வாத்துகள் திடீரென உயிரிழந்தன. அடுத்தடுத்து வாத்துகள் உயிரிழந்ததால் அதிர்ச்சியடைந்த பண்ணை உரிமையாளர் மற்றும் அப்பகுதி மக்கள், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, சுகாதாரத் துறையினர் முதற்கட்ட ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தைச் சேர்ந்த குழுவினர் வடதில்லை பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். வாத்துகள் பறவைக் காய்ச்சல் (Avian Influenza) பாதிப்பால் உயிரிழந்தனவா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், உயிரிழந்த வாத்துகளின் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Buy Now ! Pay Daily !
மேலும், பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தடுப்பு வழிமுறைகள் குறித்து அப்பகுதி மக்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். தொடர்ந்து ஊத்துக்கோட்டை, கச்சூர், மாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்ட குழுவினர், பொதுமக்கள் உரிய தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினர்.
இதற்கிடையே, சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டன. வாத்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளியான பின்னரே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






