← முகப்பு

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக் கூடம்... ரூ.2 லட்சம் பராமரிப்புக்குப் பிறகும் இடியும் அவலம்! 200 குடும்பங்கள் அச்சம்

ரூ.2 லட்சம் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொண்டதாகக் கூறப்படும் நிலையிலும், கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் சுவர்களில் விரிசல்

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக் கூடம்... ரூ.2 லட்சம் பராமரிப்புக்குப் பிறகும் இடியும் அவலம்! 200 குடும்பங்கள் அச்சம்

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சமுதாயக் கூடம்... ரூ.2 லட்சம் பராமரிப்புக்குப் பிறகும் இடியும் அவலம்! 200 குடும்பங்கள் அச்சம்!

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலநெட்டூர் ஊராட்சியில் உள்ள கீழக்குடியிருப்பு கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயக் கூடம் கட்டப்பட்டது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய விவசாயக் குடும்பங்களுக்கு இந்தச் சமுதாயக் கூடம் பெரும் உதவியாக இருந்து வருகிறது. பொருளாதார வசதி படைத்தவர்கள் நகர்ப்புறங்களில் உள்ள திருமண மண்டபங்களில் நிகழ்ச்சிகளை நடத்தும் நிலையில், விவசாயத் தொழிலை நம்பி வாழும் இக்கிராம மக்கள் தங்களது குடும்ப நிகழ்ச்சிகளை இந்தச் சமுதாயக் கூடத்திலேயே நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டிடம் சேதமடைந்ததைத் தொடர்ந்து, ஏற்கெனவே இருந்த சமுதாயக் கூடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக 2020–2021 நிதியாண்டில் 14-வது நிதிக்குழு மூலம் ரூ.2 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட சில ஆண்டுகளிலேயே கட்டிடம் மீண்டும் சேதமடைந்து, தற்போது சுவர்களிலும் மேற்கூரையிலும் விரிசல்கள் ஏற்பட்டு இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் பிறந்தநாள் நிகழ்ச்சி இந்தச் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென மேற்கூரை பூச்சின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும், சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. அங்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். சமுதாயக் கூடம் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதால், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 லட்சம் செலவில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் தற்போது மீண்டும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டிருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பராமரிப்புப் பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டனவா, கட்டிடத்தின் தரம் பரிசோதிக்கப்பட்டதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே, ஆபத்தான நிலையில் உள்ள சமுதாயக் கூடத்தை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடிக் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சேதமடைந்த கட்டிடத்தை அகற்றி, தரமான முறையில் புதிய சமுதாயக் கூடம் கட்டித்தர வேண்டும் என்பதே கீழக்குடியிருப்பு கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்தக் கட்டிடம் குறித்து சம்பந்தப்பட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !