தொழிலதிபர் ஜெம் வீரமணி மீது பல சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் மாதம் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி அவரது ஓட்டுநர்கள், உதவியாளர்கள் மற்றும் காவலாளிகள் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இவ்வழக்கில் கைதாகி உள்ள ஜெம் வீரமணியின் முன்னாள் ஓட்டுநர் மற்றும் உதவியாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, மிக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று காவல்துறையினருக்குக் கிடைத்துள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டின் பின்புறம் உள்ள காலி இடத்தில், பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சடலங்கள் மற்றும் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
ஓட்டுநர் அளித்த இந்த அதிர்ச்சி புகாரைத் தொடர்ந்து, சிறப்பு புலனாய்வுக் குழு மற்றும் காவல்துறையினர் உடனடியாக தீவிர நடவடிக்கையில் இறங்கினர். இன்று மதியம் (நவம்பர் 14) ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணியின் வீட்டிற்கு ஜேசிபி மற்றும் புல்டோசர் உள்ளிட்ட கனரக இயந்திரங்களுடன் காவல்துறையினர் திடீரெனச் சென்றனர். வீட்டின் பின்புறம் மற்றும் வளாகத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய இடங்களில் சுமார் 10 அடி ஆழத்திற்குப் பள்ளங்கள் தோண்டி காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தச் சோதனையின் போது எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Buy Now ! Pay Daily !
ஜெம் வீரமணிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட பல்வேறு போக்சோ வழக்குகளில், முதல் வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு சுமார் 720 பக்கங்களைக் கொண்ட இறுதி குற்றப்பத்திரிக்கைசமீபத்தில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் 40-க்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், சில காவல் அதிகாரிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி ஒட்டுமொத்த தமிழக அரசியலிலும் காவல்துறையிலும் அதிர்லையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, ஜெம் வீரமணி மீதான வழக்குகள் தொடர்ந்து அதிகரித்துவருவதும், தற்போது அவரது வீட்டில் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டு காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீவிர சோதனையின் முடிவிலேயே உண்மையான நிலவரம் என்ன என்பது குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



