← முகப்புமதுரை →

திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை தீபம் ஏற்றப்படுமா?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்று தீவிரமடைந்துள்ளன.

திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை தீபம் ஏற்றப்படுமா?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்கில், கடந்த நவம்பர் 20ஆம் தேதி உச்சநீதிமன்றம் நவம்பர் 24ஆம் தேதி தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு ஒருமுறை அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தது.

ஆனால், கார்த்திகை தீபத் திருநாளன்று மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றப்படாமல், வழக்கமான உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகிலேயே தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தின் உத்தரவு செயல்படுத்தப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பாஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, முந்தைய உத்தரவு வேண்டுமென்றே மீறப்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாகக் கருத்துத் தெரிவித்தது. நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் தன்னிச்சையாக மாற்றவோ, செயல்படுத்தாமல் இருக்கவோ முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, நவம்பர் 28ஆம் தேதியான இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கட்டாயம் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

கோயில் நிர்வாகப் பொறுப்பில் ஓய்வுபெற்ற நீதிபதிகள்!

இந்த விவகாரத்தில் முக்கிய நடவடிக்கையாக, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் அறங்காவலர் குழுவைத் தற்காலிகமாக இடைநீக்கம் செய்த உச்சநீதிமன்றம், கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதிகளான எஸ். வைத்தியநாதன், வி. பார்த்திபன் ஆகிய இருவரையும் பொறுப்பாளர்களாக நியமித்துள்ளது.

அதன்படி, இன்று மதுரை வந்துள்ள இரு நீதிபதிகளும் கோயில் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்று, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் குறித்து கோயில் ஸ்தானிக பட்டர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மதுரை விமான நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இந்த ஆலோசனை நடைபெற்றுவருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபம் ஏற்றுவதற்கான நேரம், அதில் பங்கேற்கும் நபர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்பட உள்ளது.

மலை முழுவதும் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில்!

தீபம் ஏற்றும் நிகழ்வின்போது எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய ரிசர்வ் காவல் படையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சிஆர்பிஎஃப் வீரர்கள் மதுரை வந்தடைந்து பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் மக்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கோயில் மட்டுமின்றி, மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவுக்கும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், தர்காவுக்கு வரும் இஸ்லாமியர்கள் வழிபாடு செய்வதற்கு எந்தவித இடையூறும் ஏற்படக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், தர்காவைச் சுற்றியுள்ள அனைத்துத் திசைகளிலும் குறைந்தபட்சம் 50 மீட்டர் இடைவெளியைப் பாதுகாத்து, அந்த எல்லைக்கு வெளியே மலைப்பகுதியில் பக்தர்கள் தீபம் ஏற்றலாம் என்றும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

தீபத்தூணில் மேடை அமைக்கும் பணி தீவிரம்!

உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்றுவதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் இன்று காலை முதலே நடைபெற்று வருகின்றன. தீபத்தூணைச் சுற்றி மேடை அமைப்பதற்கான பொருட்கள் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, விளக்கு ஏற்றுவதற்கு ஏதுவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

மேலும், நவம்பர் 24ஆம் தேதி உச்சிப்பிள்ளையார் மண்டபத்தில் ஏற்றப்பட்ட தீபம் தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தால், அந்தத் தீபத்திலிருந்து கிடைக்கும் சுடரைக் கொண்டு தீபத்தூணில் விளக்கேற்றலாம் என்றும், இல்லையெனில் மாற்று ஏற்பாட்டின் மூலம் தீபம் ஏற்றலாம் என்றும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு – பக்தர்கள் குவிப்பு!

தீபம் ஏற்றும் நிகழ்வைக் காண்பதற்காக திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வளாகத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் இருந்து வந்த 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனைக்குப் பிறகு தர்காவுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், இன்று மாலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் நிகழ்வைக் காண்பதற்காக இஸ்லாமியர்கள் சிலரும் தர்காவுக்குச் செல்வதாக வெளியாகியுள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

அதிகாரிகளுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்!

இதற்கிடையே, ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவைச் செயல்படுத்தத் தவறியதாகக் கூறி, தமிழக தலைமைச் செயலாளர், காவல்துறை டிஜிபி, மதுரை மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு உச்சநீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும், தீபம் ஏற்றப்படாததற்கு வழிவகுத்த நிகழ்வுகள், அதிகாரிகளுக்கு இடையே பரிமாறப்பட்ட மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் டிசம்பர் 15ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் நேரடியாக நிர்வாகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பரங்குன்றம் மலைப்பகுதி முழுவதும் பலத்த பாதுகாப்பு மற்றும் பெரும் எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது.

பக்தர்களுக்கு அனுமதி மறுக்கும் தமிழக போலிசார்

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் மற்றும் பழனியாண்டவர் கோயில்களுக்குச் செல்ல முயன்ற இந்து பக்தர்களைத் தமிழக காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது.

நீதிபதியின் வாய்மொழி உத்தரவு இருப்பதாகக் கூறி பக்தர்கள் மலைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பக்தர்கள் மலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது தொடர்பாக முன்கூட்டியே எவ்வித எச்சரிக்கைப் பலகைகளும் வைக்கப்படவில்லை என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்த முருக பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், மலை உச்சியில் உள்ள சிக்கந்தர் தர்காவுக்குச் செல்லும் இஸ்லாமியர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும், இந்து பக்தர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றம் நவம்பர் 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யவும், தர்கா மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், நீதிபதியின் வாய்மொழி உத்தரவு எனக் கூறி பக்தர்கள் தடுக்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !