திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகையன்று தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அன்று தீபம் ஏற்றப்படாததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றத்திலே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்பட்டு உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான விசாரணை நடைபெற்றது.
பின்னர் இன்று திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், காவலுக்கு மாநில காவல்துறைக்கு பதிலாக மத்திய சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் திருப்பரங்குன்றத்தைக் கொண்டு வரவும் உத்தரவிட்டது. மேலும் அந்த உத்தரவில் பொதுமக்களும், பக்தர்களும் தீபம் ஏற்ற மலை உச்சியில் உள்ள தீபத்தூண் பகுதிக்கு செல்லலாம் என அனுமதியும் வழங்கப்பட்டது.
Buy Now ! Pay Daily !
இதனால் இன்று காலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும், பக்தர்களும் திருப்பரங்குன்றத்திலே கூடியுள்ளனர். இந்நிலையில் மலைமீது செல்ல பக்தர்களுக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக சிஆர்பிஎஃப் வீரர்களிடம் இந்து அமைப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு விளக்கம் அளித்த சிஆர்பிஎஃப் ஐஜி விக்ரம், இன்று தீபம் ஏற்றுவதற்காக நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட சில பேரை மட்டுமே அனுமதிக்க முடியும் என்றும், அனைத்து பக்தர்களும் நாளை முதல் கட்டுப்பாடுகள் இன்றி எப்போதும் தீபத்தூண் பகுதிக்கு சென்று வரலாம் என்றும் விளக்கம் அளித்தனர். ஆனால் அதை ஏற்றுக் கொள்ள மறுத்த இந்து அமைப்பினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.
இதற்கிடையே மத்திய படையின் அறிவுறுத்தல்களை மீறி சில பக்தர்கள் மலை மீது ஏறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. மாலை 5 மணிக்கு தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில் பக்தர்கள் மேலே செல்ல அனுமதிக்கப்படாதது தொடர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.






