← முகப்பு

ரத்த உறவுத் திருமணங்களில் இவ்வளவு பிரச்சனைகளா?

ரத்த உறவுத் திருமணங்களில் இவ்வளவு பிரச்சனைகளா?

நெருங்கிய ரத்த உறவுகளுக்கு இடையேயான திருமணங்கள் என்பது நம் சிறுவயதில் இருந்து பார்த்து வந்தது தான். ஏன் நம் உறவினர்களுக்குள்ளேயே திருமணத்திற்கு வரன் தேடுவது , சிறு வயதிலிருந்தே சொந்தகளுக்குள் இவருக்கு இவர் என பேசி வருவது என அனைத்தும் வழக்கான ஒன்று தான். ஆனால் ஆராய்ச்சியின் படி ரத்த சொந்தகளுக்குள் திருமணம் செய்வது மரபணு பாதிப்புகளை உருவாக்கும் என கூறுகின்றனர். இதனை நாம் கேள்விப்பட்டு இருப்போம் ஆனால், அதனை நம்பி அப்படிப்பட்ட திருமணங்கள் நடைபெறாமல் இல்லை. இதற்காக அரசு எது எதோ வகையில் விழிபுணர்வு என பல நடவடிக்கைகளை முன்னெடுத்தது, அந்த வகையில் இதற்காக சட்டம் கொண்டுவரும் பணிகளும் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இது குறித்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

வழக்கு எப்படி வந்தது?

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !

ரத்த உறவுத் திருமணங்களால் ஏற்படும் உடல்நல மற்றும் மரபணு பாதிப்புகளைத் தடுக்க உரிய வழிகாட்டுதல்களை வழங்கக் கோரி, 40 சதவீத பார்வை குறைபாடுடைய சட்ட மாணவி சாருவி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் இதை விசாரித்தனர்.

நீதிமன்றம் சொன்னது என்ன?

நீதிபதி பக்சி, திருமணம் என்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது என்று இந்த நீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளதை நினைவூட்டினார். கட்டாய உத்தரவுகள் மூலம் நீதிமன்றங்கள் இதை ஒழுங்குபடுத்த முடியாது என்றும், ஆனால் இது போதிய விழிப்புணர்வுடன் எடுக்கப்படும் முடிவாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். பாரம்பரியமாகத் தொடரும் இத்தகைய திருமணங்களைச் சமூக சீர்திருத்தச் சட்டம் மூலம் மறுபரிசீலனை செய்வது சட்டமன்றம், நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என்றும், அதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், தாங்கள் சட்டம் இயற்றக் கோரவில்லை என்றும், தற்போதைய சட்டக் கட்டமைப்புக்குள்ளேயே சில பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கோருவதாகவும் வாதிட்டார். தென் மாநிலங்களில் இத்தகைய திருமணங்கள் 28 சதவீதம் வரை உள்ளதாகவும், கிராமப்புறங்களில் பின்விளைவுகள் தெரியாமலேயே குடும்பத்துக்குள் திருமணம் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நகர்ப்புறங்களிலும் இந்தப் போக்கு காணப்படுவதாகக் கூறிய தலைமை நீதிபதி, மனுதாரருக்குத் தங்கள் முழு அனுதாபம் உண்டு என்றார். கிராமப்புறங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த அங்கன்வாடி பணியாளர்கள், பஞ்சாயத்துகளை ஈடுபடுத்தலாம் என்றும் யோசனை தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவு என்ன?

ரத்த உறவுத் திருமணங்களின் எதிர்மறை விளைவுகள் குறித்து மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை உருவாக்க, தகுந்த சட்டம் இயற்றுவது குறித்துப் பரிசீலிக்கவோ, பள்ளி, கல்லூரிகளில் உரிய பாடத்திட்டங்களைச் சேர்ப்பது உள்ளிட்ட வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கை ஒத்திவைத்தனர்.

தரவுகள் சொல்வது என்ன?

தேசிய குடும்ப நல ஆய்வு (NFHS-5, 2019-21) தரவுகளின்படி: 13%: திருமணத்துக்கு முன்பே கணவருக்கு உறவினராக இருந்த பெண்கள் 11%: நாடு முழுவதும் நடைபெற்ற மொத்தத் திருமணங்களில் ரத்த உறவுத் திருமணங்கள் 8%: நெருங்கிய ஒன்றுவிட்ட சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான திருமணங்கள்

அதிலுள்ள முதல் 5 மாநிலங்கள்

1. தமிழ்நாடு: 28% 2. கர்நாடகா: 27% 3.ஆந்திரப் பிரதேசம்: 26% 4.புதுச்சேரி: 19% 5.தெலங்கானா: 18%

ரத்த உறவுத் திருமணம் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன?

நெருங்கிய ரத்த உறவுகளுக்கு இடையே நடைபெறும் திருமணங்களால் பிறக்கும் குழந்தைகளுக்கு மரபணுக் கோளாறுகள், பிறப்புக் குறைபாடுகள், உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. இரு பெற்றோரும் ஒரே மரபணுப் பின்னணியைக் கொண்டிருப்பதால், மறைந்திருக்கும் மரபணுக் குறைபாடுகள் குழந்தைக்கு வெளிப்படும் வாய்ப்பு கூடுகிறது. இதயக் கோளாறுகள், பார்வை அல்லது செவித்திறன் குறைபாடுகள், ஃபினைல்கீடோன்யூரியா போன்ற வளர்சிதை மாற்ற நோய்கள் இவற்றில் அடங்கும். சில ஆய்வுகளில் அறிவுசார் வளர்ச்சிக் குறைபாடுகள், மனநலப் பிரச்சனைகளுக்கான சாத்தியம் அதிகரிக்கலாம் என்றும், கருச்சிதைவு அல்லது குழந்தை இறப்பு விகிதம் சற்று உயரலாம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் திருமணத்துக்கு முன்போ கர்ப்பம் தரிப்பதற்கு முன்போ மரபணு ஆலோசனை பெறுவதும், தேவையான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்துகொள்வதும் அபாயங்களை முன்கூட்டியே கண்டறிய உதவும். இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் கவலை தெரிவித்து, விழிப்புணர்வு மற்றும் சட்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸுக்கு மத்திய அரசு அளிக்கும் பதிலே இந்த வழக்கில் அடுத்த முக்கியக் கட்டமாக இருக்கும். சட்டம் இயற்றுவதா, பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதா என்பது குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியிருக்கும். கிராமப்புறங்களில் அங்கன்வாடி பணியாளர்கள், பஞ்சாயத்துகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்ற தலைமை நீதிபதியின் யோசனையும் அடுத்த விசாரணையில் பரிசீலிக்கப்படலாம். இந்தப் பதிலுக்குப் பிறகே, இத்தகைய திருமணங்கள் அதிகமுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது தெளிவாகும்.

Zamorra BNPD Shopping

Buy Now ! Pay Daily !